மீனவர் பிரச்னை: தமிழக அரசின் ஆதரவின்றி தீர்வு காண முடியாது

sudarshan_nachiappanஇலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதல்களுக்கு ஆளாகும் தமிழக மீனவர்களின் விவகாரத்துக்கு தமிழக அரசின் துணையின்றி தீர்வு காண முடியாது என மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.

கச்சத்தீவைப் பொருத்தவரை, அது இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நட்புப் பகுதியாக இருக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறை, சட்டக் கல்வித் துறை, ஜெர்மனியைச் சேர்ந்த ஃபிரிட்ரிச் எபெர்ட் ஸ்டிஃப்டங் என்ற அமைப்பு ஆகியவை இணைந்து “ஊடகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச சட்டம்’ என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கை சென்னையில் வெள்ளிக்கிழமை நடத்தின.

இதில் பங்கேற்று சர்வதேச சட்டத்துக்கான இந்திய சமூக சென்னைப் பிரிவைத் தொடங்கி வைத்த அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில் விவரம்:

கச்சத்தீவு விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி கொண்டிருப்பதாக கூட்டணி கட்சித் தலைவரே விமர்சித்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு கட்சியும் அவரவருடைய கருத்தை வெளிப்படுத்த உரிமை உள்ளது.

கூட்டணியில் இருப்பதால் ஒரு கட்சி, மற்றொரு கட்சியின் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, கட்சத்தீவு என்பது இந்தியாவுக்கும், இலங்கைக்குமான நட்புப் பகுதியாக இருக்க வேண்டும் என விரும்புகிறது என்றார்.

மேலும் அவர் கூறியதாவது: இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களிடையே சுமுக உறவை ஏற்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் இலங்கையில் உள்ள மீனவர் சங்கங்களும், இந்திய மீனவர் சங்கங்களும் இணைந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகளுக்கு இரு நாட்டு கடற்படையும், கடலோரக் காவல்துறையும் துணை நிற்க வேண்டும் எனவும் நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம், கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

இப்போது மூன்றாம் சுற்று பேச்சு நடத்த முடிவு செய்துள்ள நிலையில், தமிழக அரசு துணை நின்றால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படாத அல்லது கைது செய்யப்படாத அளவுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும். தமிழக அரசு ஆதரவு இல்லாமல் எந்தவித சுமூக உறவையும் ஏற்படுத்த முடியாது.

இலங்கையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு மாகாணத்துக்கு சனிக்கிழமை தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தல் மூலம் அமையும் மாநில அரசுக்கு 37 அதிகாரங்களை, இலங்கை மத்திய அரசு வழங்கும். எனவே, தேர்தலில் தமிழ்த் தலைவர்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தால், அங்குள்ள தமிழர்களுக்கு சம உரிமைகள் கிடைத்து அவர்களின் வாழ்க்கை நிலை உயரும்.

இதுபோல் அங்குள்ள தமிழர்களின் நிலை உயர இந்திய அரசும், தமிழக அரசும் உறுதுணையாகத்தான் இருக்க வேண்டும்.

பிரதமர் வெளிநாட்டு பயணம் குறித்த முடிவுகள் பாதுகாப்பு காரணமாக கடைசி நேரத்தில்தான் எடுக்கப்படும். எனவே, இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா என்பது இனிமேல்தான் தெரியும். இலங்கையில் தேர்தலுக்குப் பிறகும் தமிழர் பகுதி மேம்பாட்டுக்கான இந்தியாவின் பங்களிப்பு தொடரும் என்றார் அவர்.

TAGS: