போலீஸார் பற்றாக்குறையால் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்!

tamil nadu policeதிருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸார் பற்றாக்குறை காரணமாக கொலை, கொலை, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்டத்தில் 28 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லையில் மட்டும் 16 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.

வருவாய் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி, அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர், ஆவடி, வளசரவாக்கம், நாரவாரிக்குப்பம் உள்ளிட்ட நகராட்சிகளும், திருநின்றவூர், புழல், போரூர் உள்ளிட்ட பேரூராட்சிகளும் சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ளன.

போலீஸார் பற்றாக்குறை:

திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, திருவாலங்காடு ஆகிய தாலுக்காவுக்கு உட்பட்ட பகுதிகள் திருவள்ளூர் மாவட்ட போலீஸாரின் கட்டுப்பாட்டில் வருகிறது.

இந்நிலையில் இப்பகுதியில் வசித்து வரும் 16 லட்சம் பேர் கொண்ட மக்கள் தொகைக்கு 1,350 போலீஸார் மட்டுமே உள்ளனர்.

இம்மாவட்டத்தில் ஒரு எஸ்.பி., 2 ஏ.டி.எஸ்.பி.க்கள், 8 டி.எஸ்.பி.க்கள், 36 காவல் ஆய்வாளர்கள், 100 உதவி ஆய்வாளர்கள், 300 தலைமைக் காவலர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படையினர் உள்பட சுமார் 1,350 போலீஸார் உள்ளனர்.

இதில் 100-க்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர்.

குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு:

போலீஸாரின் பற்றாக்குறை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை தற்போது மிகவும் அதிகரித்துள்ளது.

கடந்த 1997-ம் ஆண்டில் மாவட்டத்தில் சுமார் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2000-ம் ஆண்டில் சுமார் 8 முதல் 9 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக, ஆண்டுக்கு 13 முதல் 15 ஆயிரம் வரை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

இதில் தற்கொலை, விபத்து வழக்குகள் என 3 ஆயிரம் வழக்குகள் இருப்பினும், மற்றவை அனைத்தும் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை, மோசடி, பாலியல் குற்றங்கள் போன்ற வழக்குகளே பதிவாகியுள்ளன.

இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு கூட திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து புறநகர் மின்சார ரயிலில் சென்ற பெண்ணை சிலர் கடத்த முயன்ற சம்பவம் நிகழ்ந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2011-12-ம் ஆண்டில் காவல் கண்காணிப்பாளராக வனிதா இருந்தார். அப்போது குற்றங்களைத் தடுக்க புதிய முறை கொண்டு வரப்பட்டது.

அதன்படி, குற்றங்கள் அதிகளவில் நடைபெறும் இடங்களைத் தேர்வு செய்து அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்கள் ஹெவி, மீடியம், லைட் என தரம் பிரிக்கப்பட்டன.

அதில் “ஹெவி’ எனக் கண்டறியப்படடும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு 80 போலீஸாரும், “மீடியம்’ காவல் நிலையங்களுக்கு 50 போலீஸார், “லைட்’ காவல் நிலையங்களுக்கு 30 போலீஸாரும் நியமிக்கப்பட்டனர்.

ஆனால் போலீஸார் பற்றாக்குறையால் இந்த நடைமுறையை முறையாக அமல்படுத்த முடியவில்லை.

எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகைக்கேற்ப போலீஸாரின் எண்ணிக்கைûயும் உயர்த்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து மாவட்ட எஸ்.பி. ரூபேஷ்குமார் மீனா கூறுகையில், மற்றவர்களுடைய நிர்வாகம் குறித்து எனக்கு தெரியாது. என்னுடைய நிர்வாகத்தில் பெறப்படும் அனைத்து புகார்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படுகின்றன. அதனால் வழக்குகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன என்றார்.

TAGS: