மீனவர்களிடையே சென்னையில் பேச்சுவார்த்தை: ஜெ அழைப்பு

jayalalithaஇந்திய இலங்கை மீனவர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து டிசம்பரின் சென்னையில் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இருநாட்டு மீனவர்களும் கடல் எல்லையில் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு முடிவு காணும் வகையில் அவர்களிடையே எதிர்வரும் டிசம்பரில் சென்னையில்பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு உதவவேண்டும் என அவர் கோரியிருக்கிறார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதமொன்றில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 36 தடவை இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தாக்கியுள்ளது என்றும், 254 மீனவர்களை கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதும் 97 தமிழக மீனவர்கள் இலங்கை ஜெயிலில் பல மாதங்களாக வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஜெயலலிதா தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கச்சத் தீவு

இப்பிரச்சினைக்கு காரணமே 1974–ம் ஆண்டு தவறான ஆலோசனை மூலம் கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்தது தான் எனவும் அவர் கூறியுள்ளார்.

இப்பின்னணியில் இரு தரப்பு மீனவர்களுக்கிடையே இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் தாக்குதலும், கைது நடவடிக்கையும் நீடித்து கொண்டு இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இலங்கை மீனவர்களுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என தமிழக மீன்வர்கள் விரும்புகின்றனர், என்கிறார் ஜெயலலிதா.

பேச்சு வார்த்தைகள் சென்னையில் நடைபெற வேண்டும் என்றும் பேச்சு வார்த்தையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கடத்தி செல்லப்படுவது, நீண்ட நாட்களாக ஜெயிலில் அடைப்பது போன்றவற்றை தீர்க்கும் வகையில் விவாதிக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

அந்தப் பேச்சுவார்த்தைகளில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதியில் தொடர்ந்து மீன் பிடிக்க உரிமை அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் அது குறித்து நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கவேண்டாம் எனவும், எப்படியும் பேச்சு வார்த்தையில் ஏற்படும் முடிவுகளுக்கு தமிழக அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும் எனவும் ஜெயலலிதா வலியுறுத்துகிறார்.

பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளும் இலங்கை மீனவர்கள் பட்டியலை முன்கூட்டியே தமிழக அரசிற்கு தெரியப்படுத்தவேண்டுமெனவும் அவர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறார். -BBC

TAGS: