மாநில அதிகாரத்தில் மத்திய அரசு குறுக்கீடு: தமிழக முதல்வர் குற்றச்சாட்டு

Jayalalithaa_pointing_finger“மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு குறுக்கீடு செய்யும் போக்கு தொடர்ந்து நீடித்து வருவதாக’ தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

தில்லியில் 16-வது தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உரையை, அவரது சார்பில் பங்கேற்ற மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி வாசித்தார். அதன் விவரம்:

சமூகத்தில் அமைதி மற்றும் பொது ஒழுங்குப் பராமரிப்பு, குடிமக்களுக்கான பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவது மாநில அரசுகளின் முதன்மையான கடமை. அதைக்  கருத்தில் கொண்டே மத ரீதியிலான பதற்றம், பிரிவினைவாதம் அல்லது அதுபோன்ற ஊறு விளைவித்தலைத் தடுக்கும் நோக்குடன், “மாதிரி வளர்ச்சித் திட்டம்’ தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சிறுபான்மையினர் நல இயக்ககம் ஆகியவை மூலம் சிறுபான்மையினரின் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மெக்கா, ஜெருசலேம், மானசரோவர், முக்திநாத் ஆகிய இடங்களுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும் யாத்ரிகர்களுக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.

அதிகாரத்தில் தொடரும் தலையீடு: தனி நபர் சுதந்திரத்தைக் காக்க குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளின்படி, மாநில அரசு பிறப்பிக்கும் தடுப்புக் காவல் உத்தரவுகளை, குறிப்பாக அரசியல் காரணங்களுக்காக, மத்திய அரசு ரத்து செய்வது தொடருகிறது.

மாநிலங்களில் பொது அமைதியைப் பராமரிப்பதில் தீவிர சமரசம் செய்யும் வகையில், மத்திய அரசின் போக்கு அமைகிறது. மத்திய அரசு உத்தேசித்துள்ள தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய விவகாரத்திலும், வகுப்புவாத வன்முறைத் தடுப்பு வரைவு மசோதா விவகாரத்திலும் மத்திய அரசு ஆக்கப்பூர்வமற்ற அணுகுமுறையைக் கையாளுகிறது.

வகுப்புவாத வன்முறைத் தடுப்பு மசோதாவின் 20-வது வரைவுச் சட்டப் பிரிவில் உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய மத நல்லிணக்க ஆணைக் குழு, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவை மாநில சுயாட்சி மீதான நேரடித் தாக்குதலாகும்.

சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயலும் சமூக விரோத சக்திகளின் சவால்களை வலுவான, திறமையான, ஆயுதம் பலம் மிக்க கட்டுக்கோப்பான காவல் துறையால் மட்டுமே எதிர்கொள்ள முடியும்.

எஸ்சி, எஸ்டி பாதுகாப்புக்கு நடவடிக்கை: காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் தலைமையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பாதுகாப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர் பாதுகாப்புச் சட்டம் 1989-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், 11 காவல் துறை துணைக்  கண்காணிப்பாளர்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. கடந்த ஜூன் 25-ஆம் தேதி எனது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்கூட இச் சட்டத்தின் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மாநிலங்களை மதிக்க வேண்டும்: அரசியலமைப்புக் கட்டமைப்பில் சட்டம்-ஒழுங்குப் பராமரிப்பு, காவல் துறை ஆகியவை மாநிலம் சார்ந்த விஷயங்கள் என்பதை மத்திய அரசு இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும். சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது மாநில அரசுகளின் அடிப்படைக் கடமை.

ஆனால், அதற்கு மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே புரிந்துணர்வும், ஒத்துழைப்பும் அவசியம் இருக்க வேண்டும். உள்நாட்டு மோதலில் இருந்து தேசத்தைக் காக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் சம அளவிலான பங்குதாரர்களாக விளங்க வேண்டும். மாநிலங்களை சமமான கூட்டாளிகளாக மதிக்க வேண்டும்.

ஆதாரங்கள், தகவல்கள், நுண்ணறிவு ஆகியவற்றை மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன் மூலம், பயங்கரவாதம், அடிப்படைவாதம், வகுப்புவாதம் ஆகியவற்றைத் தீவிரமாக ஒடுக்க முடியும்.

ஏமாற்றம் அளிக்கிறது: காவல் துறை நவீனமயமாக்கல், உளவு சேகரித்தல் மற்றும் காவல் துறையினர் பயிற்சிக்கான கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு ஒதுக்கும் நிதியைக் கணிசமாக உயர்த்த வேண்டும்.

ஆனால், 2012-2013 நிதியாண்டில் காவல் துறையை நவீனப்படுத்த மத்திய அரசு ஒதுக்கிய நிதி, 75 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகக் குறைந்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அந்த உரையில் தெரிவித்துள்ளார்.

தமிழகம்அமைதிப் பூங்கா

சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க, மாநில காவல் துறையினருக்கு சுதந்திரமான, சமரசம் செய்து கொள்ளாத ஆதரவை நான் வழங்கி வருகிறேன். அதன் விளைவாக, “சட்டம்-ஒழுங்கைச்  சிறப்பாகப் பராமரிக்கும் தேசிய அளவிலான அமைதிப் பூங்கா’ என்ற நற்பெயரை தமிழகம் எடுத்துள்ளது.

மதவாத அமைப்புகளின் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக உளவுத் துறையினரின் தனிப் பிரிவினர் உன்னிப்புடன் கண்காணித்து வருகின்றனர். பேச்சுகள், துண்டுப் பிரசுரங்கள், ஒலி-ஒளி வெளியீடுகள் மற்றும் இதர நடவடிக்கைகள் மூலம் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் செயல்படுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

TAGS: