எம்.பி., எம்.எல்.ஏ. தகுதி நீக்கத்தை தடுக்க அவசரச் சட்டம்?

INDIA-POLITICS-VOTE-PROTESTஉச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

குற்ற வழக்குகளில் சிக்கி 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை உடனடியாகத் தகுதிநீக்கம் செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தது. இதனால் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் மேல் முறையீடு செய்வதற்கு முன்பே பதவியை இழக்கும் அபாயம் தோன்றியது.

இதைத் தவிர்ப்பதற்காக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிராகரிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கொண்டு வந்தது. அது மாநிலங்களவையில் இன்னும் நிறைவேறவில்லை. அதுவரை, மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து தங்கள் பதவியை இழப்பார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, ஊழல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ரஷீத் மசூதின் குற்றத்தை சிபிஐ நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. குறைந்தது 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில் அவர் உடனடியாக எம்.பி. பதவியை இழப்பார்.

எம்.பி.க்கள் உடனடியாகப் பதவியிழப்பதைத் தடுக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற வேண்டுமானால், நாடாளுமன்றம் கூட வேண்டியுள்ளது. ஆனால், குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்க இன்னும் 3 மாதங்கள் உள்ளன.

எனவே, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக தகுநதிநீக்கம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு குடியரசுத் தலைவர் மூலம் ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், இந்த விஷயத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவை தெரிவித்தன.

TAGS: