மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அதன் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியும், அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டனர்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டப் பிறகு அவரும், எல்.கே. அத்வானியும் ஒரே மேடையில் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் தேர்தல் பிரசார குழுத் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதால் எல்.கே. அத்வானி அதிருப்தி அடைந்தார். அவர் நேரடியாகவே தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
அவரது கோபம் தணிவதற்குள், பாஜகவின் பிரதமர் வேட்பாளராகவும் நரேந்திர மோடியை கட்சித் தலைமை அறிவித்தது. இதனால், ஆத்திரமடைந்த எல்.கே. அத்வானி, தனது கோபத்தை கட்சித் தலைமையிடம் பதிவு செய்தார். அவரைச் சமாதானம் செய்ய கட்சியின் முன்னணித் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.
இதுபோன்ற சூழலில், போபாலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அத்வானியும், நரேந்திர மோடியும் கலந்து கொண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டது அந்தக் கட்சியினரின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. இருப்பினும், இருவரும் உணர்வுப்பூர்வமாக வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்று அந்தக் கட்சியினர் கருதுகின்றனர்.
முகத்தைப் பார்க்கவில்லை:
பொதுக் கூட்ட மேடைக்கு வந்த அத்வானியின் பாதங்களைத் தொட்டு மத்தியப் பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் செüகான் வாழ்த்துப் பெற்றார். இதைத்தொடர்ந்து, மேடையில் நின்றிருந்த நரேந்திர மோடி, அத்வானியைப் பார்த்து கரங்களைக்கூப்பி வணக்கம் தெரிவித்தார். பதிலுக்கு அத்வானியும் கரங்களைக்கூப்பி வணக்கம் தெரிவித்தார். ஆனால், அவர் நரேந்திர மோடியின் முகத்தைப் பார்த்து வணக்கம் தெரிவிக்கவில்லை. இது அங்கு குழுமியிருந்த பாஜக தொண்டர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, எல்.கே.அத்வானி பேசியது: இந்திய அரசியலில் பாஜக இந்த அளவுக்கு உயர்ந்த நிலையை எட்டியுள்ளது என்றால் அதற்கு கட்சித் தலைவர்களின் திறமையான பேச்சு காரணமல்ல; கட்சித் தலைவர்கள், தொண்டர்களின் உழைப்பே காரணம். வருகிற தேர்தல்களிலும் கடின உழைப்பின் மூலமே வெற்றியை உரித்தாக்க முடியும்; பேச்சாற்றலால் எதையும் சாதித்துவிட முடியாது என்றார் அவர்.
மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு நரேந்திர மோடி உரை நிகழ்த்த உள்ளார். நரேந்திர மோடியின் பேச்சாற்றலால் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்று அந்தக் கட்சியினர் ஆணித்தரமாக நம்புகின்றனர்.
இதுபோன்ற நிலையில், பேச்சாற்றலால் தேர்தலில் கட்சி வெற்றி பெற இயலாது என்று எல்.கே. அத்வானி கூறியதை, நரேந்திர மோடியை அவர் மறைமுகமாகத் தாக்கிப் பேசியதாகவே சிலர் கருதுகின்றனர்.
அத்வானி பேசிய போது, பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüகான், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோரின் நிர்வாகத் திறமையையும், அவர்களது ஆட்சியில் அந்த மாநிலங்கள் வளர்ச்சி பெற்றதையும் புகழ்ந்து பேசினார். இதை அங்கு திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றனர். கூட்டம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை தொண்டர்கள் மோடியின் பெயரையே உரக்க உச்சரித்தனர். இதனால், எல்.கே. அத்வானி தனது உரையைச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.