வெற்றுக் கூச்சல்களும், அடாவடி சவால்களும் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றாது: ஞானதேசிகன்

Gnanadesikanகாங்கிரஸ் கட்சியின் தமிழ்மாநிலத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்  வெளியிட்ட அறிக்கையில்,

’’இலங்கையின் வடக்குப் பகுதியில் தேர்தல் நடந்து, ஐனநாயக முறையில் ஓர்  அரசு தேர்ந்தெடுக்கப் பட்டு ஆட்சி செய்ய உள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மகத்தான வெற்றியை இந்தத் தேர்தலில் பெற்றுள்ளது. வாக்களித்த மக்களுக்கு என் வாழ்த்துகள்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களுக்கு அதிகாரம் தரவேண்டும், தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்க வேண்டும் என்று ராஜீவ்காந்தி போராடினார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முன்னின்று செய்து முடித்தார்.ஒன்றுபட்ட இலங்கைக்கு அரசியல் தீர்வு என்பது எங்கள் நிலைப்பாடு. இதே கருத்தையே முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள விக்னேஷ்வரனும் கூறியுள்ளார்.

இனிமேல் தமிழர் வாழ்கையில் வசந்தம் வீசும் என்ற நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.  இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அக்டோபர் முதல் வாரத்தில் இலங்கை செல்ல உள்ளார்.13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை இதய சுத்தியோடு இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்.

தமிழர் பகுதிகளில் உள்ள ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்.தீராத தலைவலியாக உள்ள மீனவர் பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவு எட்டப்பட வேண்டும். இலங்கையில் அமைதியான வாழ்க்கை முறையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் செய்ய முடியும் என்பதற்கு இந்தத் தேர்தல் எடுத்துக் காட்டு.இந்தத் தேர்தலே இந்திய அழுத்தத்தால்தான் நடந்தது.

வெற்றுக் கூச்சல்களும், அடாவடி சவால்களும் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றாது என்பதை தமிழகத்தில் இனியாவது சிலர் உணர வேண்டும்’’ என்றார்.

TAGS: