மதமோதல்களில் அதிகம் கொல்லப்படுவது யார்?

up riotsஇந்தியாவில் இந்த ஆண்டு நடந்த மதமோதல்களில் இதுவரை கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மதரீதியிலான புள்ளி விவரங்களை இந்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிவரையில் இந்தியாவில் 479 மத மோதல்கள் நடந்திருக்கின்றன. இதில் 66 முஸ்லிம்களும் 41 இந்துக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். 794 இந்துக்களும் 703 முஸ்லிம்களும், 200 காவல்துறையினரும் காயமடைந்திருக்கின்றனர்.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு இப்படியான மதமோதல்களில் கொல்லப்படுபவர்களின் மத அடையாளங்கள் தனித்தனியாக வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என்பதால், இந்திய உள்துறை அமைச்சகம் இப்படியான புள்ளிவிவரங்களை வெளியிட்டது சரியா தவறா என்கிற விவாதங்கள் சூடுபிடிக்கத்துவங்கியிருக்கின்றன.

மதமோதல்களில் பாதிக்கப்பட்டவர்களை மத அடிப்படையில் பிரித்து புள்ளிவிவரமாக வெளியிடும் மத்திய அரசின் செயற்பாடு நாட்டில் மதமோதல்களை தூண்டுவதற்கும், மதமோதல்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் காயங்களை ஆறாமல் கீறி, அதைவைத்து மோதல் போக்கிலான மதவாத அரசியல் செய்யவும் மட்டுமே பயன்படும் என்று ஒரு சாரார் இதை எதிர்க்கிறார்கள்.

அதேசமயம், மதமோதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமனால் இத்தகைய புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுவது அவசியம் என்று வாதாடும் மறுசாரார், இந்திய அரசின் இந்த புள்ளிவிவர வெளியீட்டை ஆதரிக்கிறார்கள். இதுபோன்ற புள்ளிவிவரங்கள் இனிமேல் ஆண்டுதோறும் வெளியிடப்படவேண்டும் என்றும் அவர்கள் கோருகிறார்கள்.

இந்திய அரசின் இத்தகைய புள்ளிவிவர வெளியீடு மிகவும் அவசியமான செயல் என்கிறார் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகவிமர்சகர் கவிஞர் மனுஷ்யபுத்ரன். இதன்மூலம், மதவாத அரசியலுக்கு எதிரான விவாதம் உண்மையான தகவல்களின் அடிப்படையில் அமையும் என்றும் மனுஷ்யபுத்திரன் தெரிவித்தார். -BBC

TAGS: