தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்களை பாதுகாக்கும் அவசரச் சட்டம் முட்டாள்தனமானது!

rahul_gandhi“குற்றவியல் வழக்கில் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவியை பாதுகாக்கும் வகையில் மத்திய அமைச்சரவை கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் தெரிவித்த அவசரச் சட்டம் முட்டாள்தனமானது; அதைக் கிழித்து எறிய வேண்டும்’ என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாகக் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பாஜக தலைவர்கள் நேரில் சந்தித்து முறையிட்டனர். அதைத் தொடர்ந்து, அவசரச் சட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசை பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டிருந்தார். இதனால், அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந் நிலையில், அதே விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் செயல்பாட்டை விமர்சித்து ராகுல் காந்தி வெளியிட்ட கடுமையான கருத்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக தில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

அவசரச் சட்டம் ஏன்?: தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரைக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், குற்றவியல் வழக்கில் தண்டனை பெறும் எம்பி, எம்எல்ஏ, எம்எல்சி ஆகியோரை உடனே சிறையில் அடைக்காமல், மேல் நீதிமன்றத்தில் மூன்று மாதங்களுக்குள் முறையிட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை உத்தரவு பெறவும், சம்பளம், வாக்குரிமையின்றி மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வரும் வரை தண்டனை பெற்றவர் உறுப்பினராகத் தொடர வகை செய்யவும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8(4) பிரிவில் திருத்தம் செய்யும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான சட்ட மசோதா அண்மையில் முடிவடைந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது நிலைக் குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந் நிலையில், மசோதா மீதான நிலைக் குழு ஆய்வு நிலுவையில் உள்ளபோதே, அது தொடர்பான அவசரச் சட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசின் நடவடிக்கையை சட்டவிரோதமான செயல் என்று பாஜக, இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்டவை விமர்சித்து வருகின்றன. முன்னதாக, மேற்கண்ட சட்டப் பிரிவை சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றமும் கடந்த ஜூலை 10-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் கூறியிருந்தது.

ராகுலின் திடீர் வருகை: இந் நிலையில், அவசரச் சட்டம் தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலர் அஜய் மாக்கன் வெள்ளிக்கிழமை பிற்பகல் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச் சந்திப்பு தொடங்கிய சிறிது நேரத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்புப் பகுதிக்கு திடீரென வந்தார். முன்னறிவிப்பின்றி அங்கு அவர் வந்ததாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியது:

“அரசியல் சமரசத்துக்காக இதுபோன்ற அவசரச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இப்போது சமரசத்தை செய்து கொள்கின்றன. எங்கள் கட்சிக்குள்ளாக நடைபெற்ற விவாதத்தின் போது சில தேவைகளுக்காக அரசு இவ்வாறு செயல்படுவதாகக் கூறப்பட்டது.

நம் நாட்டில் உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டுமானால், இத்தகைய சின்னஞ்சிறு சமரசங்களை நாம் செய்து கொள்ளக் கூடாது. இப்போது சமரசம் செய்யத் தொடங்கினால், நாளடைவில் எல்லாவற்றிலும் சமரசம் செய்து கொள்ளும் நிலை ஏற்படும்.

எதற்கும் உதவாத இச் செயலுக்கு அரசியல் கட்சிகள் முடிவு கட்ட வேண்டும். முட்டாள்தனமான இந்த அவசரச் சட்டத்தைக் கிழித்துத் தூக்கி எறிய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்’ என்றார் ராகுல் காந்தி.

ராகுல் கருத்தே காங்கிரஸ் நிலைப்பாடு: அதைத் தொடர்ந்து, செய்தியாளர் அரங்கை விட்டுப் புறப்பட முயன்ற ராகுலிடம் சரமாரியாகக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது “நாட்டுக்காக காங்கிரஸýம், அதன் தலைமையில் ஆளும் மத்திய அரசும் பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன். அந்த வகையில், அவரசச் சட்ட விவகாரத்தில் அரசு மேற்கொண்ட செயல் தவறானது எனக் கருதுகிறேன்’ என ராகுல் காந்தி கூறி விட்டுச் சென்றார்.

அவர் சென்றதும் அஜய் மாக்கன் செய்தியாளர்களிடம் பேசுகையில் “ராகுல் காந்தி இப்போது இங்கு என்ன கூறிச் சென்றாரோ அதுவே அவசரச் சட்டம் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு’ என்றார்.

புதிரும்…சந்தேகமும்…: வழக்கமாக காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெறும் உள் விவகாரங்களை செய்தியாளர்களிடம் வெளியிடுவதைத் தவிர்க்கும் வழக்கத்தை ராகுல் காந்தி கொண்டிருப்பார். இந் நிலையில், காங்கிரஸ் தலைமையகம் அமைந்துள்ள அக்பர் சாலை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தாமல் ரெய்ஸானா சாலையில் உள்ள இந்திய பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடத்தப்பட்டது ஏன் என்பது புதிராக உள்ளது.

அதேபோல, அக் கூட்டத்துக்கு ராகுல் திடீரென வந்து கட்சியின் உள்விவகார விவாதத்தையும், அரசுக்கு எதிரான கருத்தையும் வெளியிட்டது, ராகுலை முன்னிலைப்படுத்த காங்கிரஸ் மேலிடம் மேற்கொள்ளும் தந்திரமாக இருக்கலாம் என்று தில்லி அரசியல் வட்டாரங்களில் சந்தேகிக்கப்படுகிறது.

அமைச்சரவையில் விவாதித்த பிறகு முடிவு

“அவசரச் சட்ட விவகாரம் தொடர்பாக நாடு திரும்பியதும் அமைச்சரவையில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

ஒரு வார அரசு முறைப் பயணமாக மன்மோகன் சிங் கடந்த புதன்கிழமை அமெரிக்கா புறப்பட்டார். வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை தங்கியிருந்த போது ராகுல் வெளியிட்ட கருத்து குறித்து மன்மோகன் கவனத்துக்கு பிரதமர் அலுலக அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

இதையடுத்து, மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவில் திருத்தம் செய்யும் அவசரச் சட்டம் பொது விவாதத்துக்கு உள்பட்ட விஷயமாகும். அது தொடர்பாக எனக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் (ராகுல்) தனது கருத்தை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார். நான் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இந்த விஷயம் தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

TAGS: