பாகிஸ்தான் பயங்கரவாதச் செயல்களின் மையமாகத் திகழ்ந்து வருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
நியூயார்க்கில் வருகிற ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தாம் சந்தித்துப் பேசினாலும் அதனால் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இருக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
ஒருவார அரசு முறைப் பயணமாக வாஷிங்டன் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இருநாடுகளுடனும் இந்தியாவுக்கு உள்ள உறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினேன். பாகிஸ்தான் பயங்கரவாதச் செயல்களின் மையமாகவும், பயங்கரவாதிகளுக்குப் புகலிடமாகவும் செயல்பட்டு வருவதையும் பாகிஸ்தான் அத்துமீறி இந்திய எல்லை மீது தாக்குதல் தொடுத்து வருவதையும் அதனால் ஏற்படும் பிரச்னைகளையும் எடுத்துக் கூறினேன்.
பாகிஸ்தானின் புதிய பிரதமரான நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாக இருந்தபோதிலும், சமீபத்தில் பாகிஸ்தான் நடந்துகொள்ளும் முறைகளும், அதன் செயல்பாடுகளும் எனக்கு சிறிது தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நவாஸ் ஷெரீப்பை நான் வருகிற ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவிருப்பது உண்மை என்றாலும் அதனால் ஒன்றும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடப்போவதில்லை என்பதுதான் எனது கருத்தாகும். ஆனாலும், பாகிஸ்தான் தனது தீவிரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இரு நாடுகளின் பூரண ஒத்துழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு ஆகிய துறைகளில் இருநாடுகளிடையே ஏற்கெனவே கூட்டுறவு உள்ளது. எனினும் பாதுகாப்பு, புலனாய்வுத்துறைகளில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரியா மற்றும் ஈரான் விவகாரங்கள் குறித்து என்னிடம் விவாதித்தார். இந்த இரு நாடுகள் விஷயத்தில் சமாதானப் பாதைக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ள அதிபர் ஒபாமாவின் முன்முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்றார்.
இந்த பேச்சு பற்றி அதிபர் ஒபாமா கூறியதாவது: “”பாகிஸ்தான் பற்றியும், துணைக் கண்டத்தில் பதற்றத்தைக் குறைப்பது பற்றியும் இருவரும் பேசினோம்.
பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்துவதில் பிரதமர் மன்மோகன் சிங் காட்டிவரும் அக்கறை பாராட்டத்தக்கது.
அமைதியையும், ஜனநாயகத்தையும் நோக்கி ஆப்கானிஸ்தான் பயணம் தொடரவேண்டும் என்ற எங்களது ஒருமித்த கருத்தை நாங்களிருவரும் பகிர்ந்துகொண்டோம்.
இந்தியா ஒரு பிராந்திய சக்தி மட்டுமல்லை, ஒரு உலக சக்தியும் கூட. சுற்றுச்சூழல் முதல் வறுமை ஒழிப்பு வரை பல்வேறு விவகாரங்களில் நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம்” என்று கூறினார்.
முதல் அணுசக்தி வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா-அமெரிக்கா இடையில் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்ட ஐந்து வருடங்கள் கழித்து, முதல்முறையாக அணுசக்தி குறித்த வர்த்தக ரீதியிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்திய அணுசக்திக் கழகத்துக்கும், அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸýக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம், இந்தியாவில் அந் நிறுவனம் அணுமின் நிலையம் அமைக்க வழிவகை செய்துள்ளது.
எனினும், அமெரிக்கா எதிர்த்துவரும் கடுமையான இந்திய அணுசக்தி பொறுப்புச் சட்டம் குறித்து யாரும் வெளிப்படையாகப் பேசாததால், அமெரிக்க நிறுவனத்துக்கு இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுவிட்டதோ என்ற அச்சம் இந்தியாவில் எழுந்துள்ளது.
இலங்கை தமிழர்களை பற்றி வாய் திறக்க மனம் வரவில்லை…