பயங்கரவாதத்துக்கு துணைபோக வேண்டாம்: பாகிஸ்தானுக்கு மன்மோகன் எச்சரிக்கை!

manmohan_singh_sarcபயங்கரவாதத்துக்கு துணைபோவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். இல்லையெனில் அதற்கான கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் கோரிக்கையை ஒருபோதும் ஏற்கமுடியாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் பிரச்னை உள்பட பாகிஸ்தானுடனான அனைத்துப் பிரச்னைகளையும் சிம்லா உடன்பாட்டின்படி, பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மன்மோகன் சிங், நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் சனிக்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

பயங்கரவாதம் என்பது எல்லா இடங்களிலும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்குப் பெரிய அச்சுறுத்தலாகத் தொடர்கிறது. இது உலகெங்கிலும் பெரிய அளவில் அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிக்கிறது. ஆப்பிரிக்காவில் இருந்து ஆசியா வரை, பயங்கரவாத அச்சுறுத்தலின் கோர முகத்தை கடந்த சில நாள்களிலேயே நாம் கண்டோம்.

(ஜம்முவில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் பலியானதையும், கென்யாவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்ததையுமே அவர் இவ்வாறு சுட்டிக் காட்டினார்.)

பாகிஸ்தான் அரசு ஆதரவுபெற்ற எல்லை தாண்டிய பயங்கரவாதம் இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

ஜம்மு காஷ்மீர் உள்பட எல்லாப் பிரச்னைகளுக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண நாங்கள் தயார். எனினும், இதில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு துணை போவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். தங்கள் மண்ணிலிருந்து பயங்கரவாதிகள் செயல்பட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதையும், அவர்களுக்கு புகலிடம் அளிப்பதையும் பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதையும், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டில் எப்போதும் சமரசம் செய்து கொள்ளப்படாது என்பதை பாகிஸ்தான் உள்பட அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிராக உலகளாவிய நடவடிக்கை என்ற விவகாரத்தில் நாம் உறுதிபூண்டுள்ளதைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம். பயங்கரவாதிகளுக்குப் புகலிடம், பயிற்சி, நிதி, ஆயுதங்கள் ஆகியவற்றை வழங்கும் நாடுகளை யாரும் சகித்துக் கொள்ளக் கூடாது. பயங்கரவாதிகளும் அரசு சாரா நபர்களும் அணு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் தொழில்நுட்பத்தைப் பெறுவதை நாம் தடுக்க வேண்டும்.

ஐ.நா.வில் சீர்திருத்தங்கள்: பன்னாட்டு நிதி அமைப்புகள் தங்களின் முடிவு எடுக்கும் நடைமுறைகளில் வளரும் நாடுகளின் குரலைச் செவிமடுக்க முன்வர வேண்டும். இந்த அமைப்புகளிலும் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். அதை இந்த இடத்தில் இருந்து (ஐ.நா. சபை) தொடங்க வேண்டும். இப்போதையை அரசியல் யதார்த்த நிலைமையைப் பிரதிபலிப்பதற்காக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் செய்து, அதை மாற்றியமைக்க வேண்டும். பல்வேறு வளர்ந்து வரும் நாடுகளும் அதில் நிரந்தர மற்றும் தாற்காலிக உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட வேண்டும்.

ஏழ்மை ஒழிப்புக்கு முக்கியத்துவம்: உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் வாடுகின்றனர். ஏழ்மை ஒழிப்புக்கு மிக உயர் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியம்.

ஏழ்மை என்பது மிகப்பெரிய அரசியல் மற்றும் பொருளாதாரச் சவாலாகத் தொடர்ந்து நீடிக்கிறது. அதை ஒழிப்பதற்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும். 2015ஆம் ஆண்டுக்குப் பிந்தைய வளர்ச்சித் திட்டத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் இது அமைய வேண்டும். அமைதி, பாதுகாப்பு, மனித உரிமைகள், நல்லாட்சி ஆகியவை முக்கியமானவை. இது தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.

மன்மோகன் சிங் – நவாஸ் ஷெரீப் இன்று பேச்சுவார்த்தை

பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இடையே நியூயார்க்கில் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு நியூயார்க் நகருக்கு வந்தார். அவர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுடன் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் கடந்த ஜூன் மாதம் பதவியேற்ற பிறகு இரு தலைவர்களும் சந்திக்க உள்ளது இதுவே முதல் முறையாகும்.

TAGS: