தங்கள் மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாதச் செயல்களின் ஊற்றுக்கண்ணை கண்டறிந்து அதை அடைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
பயங்கரவாதச் செயல்களுக்கு துணை போவதும், பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சி, ஆயுத உதவி மற்றும் நிதியுதவி அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்றும் மன்மோகன் கண்டிப்புடன் கூறினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தால்தான் இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடர முயற்சி மேந்கொள்ளப்படும் என்று மன்மோகன் நிபந்தனை விதித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, பிரதமர் மன்மோகன் சிங், ஞாயிற்றுக்கிழமை நியூயார்க் நகரில் சந்தித்துப் பேசினார். நவாஸ் ஷெரீப் பிரதமரான பிறகு அவரை மன்மோகன் சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.
இந்த சந்திப்பின்போது பயங்கரவாத பிரச்னையை முன்வைத்தே ஷெரீப்பிடம் மன்மோகன் பேசினார். அப்போது, இந்த சந்திப்பு நடைபெறுவதற்கு முன்பு வரை பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்கள் இந்தியாவில் தொடர்ந்து வருவதை மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பிடம் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தான் படையினர் எல்லை பாதுகாப்பு ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்கள் நடத்தி வருகிறார்கள். மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் அப்போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டினார். பயங்கரவாதச் செயல்களை கட்டுப்படுத்த பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
பாகிஸ்தான் உறுதி: இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் செய்தியாளர்களிடம் கூறியது: எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை மீண்டும் கடைப்பிடிக்கும் வகையில் இரு நாட்டு ராணுவ ஜெனரல்கள் தெளிவான திட்டத்தை வகுக்க முடிவு செய்யப்பட்டது. மும்பைத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக நவாஸ் ஷெரீப் உறுதியளித்துள்ளார். பேச்சுவார்தை மூலம் எல்லைப் பகுதியில் அமைதி ஏற்பட்டிருப்பதை இருநாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
இந்தியாவில் இருந்து பயங்கரவாதம் பரப்பப்படுவதாக பாகிஸ்தான் வைத்த குற்றச்சாட்டை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக மறுத்தார் என்று சிவசங்கர் மேனன் கூறினார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர் அப்பாஸ் ஜிலானி செய்தியாளர்களிடம் கூறுகையில், நவாஸ் ஷெரீப்-மன்மோகன் இடையிலான பேச்சுவார்த்தை சுமுகமாகவும் பயனுள்ளதாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டார். காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.
இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே சந்திப்பு நடைபெறுவதற்கு முன்பு பாகிஸ்தான் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பிரதமர் ஷெரீப், மன்மோகன் சிங் குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், இது போன்ற கருத்துகளை பாகிஸ்தான் பிரதமர் தெரிவிக்கவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
மன்மோகனுக்கு ஷெரீப் அழைப்பு: இரு நாட்டு பிரதமர்களும் தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு பரஸ்பரம் அழைப்பு விடுத்தனர். ஆனால் இது குறித்து தேதி எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்று என்று சிவசங்கர் மேனன் கூறினார்.