இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகும் ஏழை தமிழக மீனவர்களை மத்திய அரசு கைவிட்டுவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 136 மீனவர்களையும், அவர்களுடைய 29 படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அவர் சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: இலங்கைக் கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையிலும், மீனவர்களின் கோரிக்கைக்கு இணங்க இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்தலாம் என கோரிக்கை விடுத்திருந்தேன்.
இந்தக் கடிதம் எழுதிய மை கூட காயவில்லை. அதற்குள்ளாக, பாக் ஜலசந்தியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 20 பேரை கைது செய்ததோடு, அவர்களது 4 விசைப் படகுகளையும் செப்டம்பர் 22-ஆம் தேதி இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் செப்டம்பர் 19-ஆம் தேதி கைது செய்துள்ளனர்.
இந்த 2 சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களோடு சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
பாம்பன் பகுதியைச் சேர்ந்த 35 மீனவர்களும், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 41 மீனவர்களும் செப்டம்பர் 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விடுவிக்கப்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. ஆனால் அவர்களுடைய 14 படகுகள் விடுவிக்கப்படவில்லை.
கடந்த 21.4.2005-ஆம் தேதி நடைபெற்ற மீனவர் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்திலும், அதன்பிறகு நடைபெற்ற கூட்டங்களிலும் கைது செய்யப்படும் மீனவர்களும் அவர்களுடைய படகுகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்த மீனவர்கள் 3 மாத காவலுக்குப் பிறகே விடுவிக்கப்படுகின்றனர்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மிக முக்கியமான இந்தப் பிரச்னையில் மத்திய அரசு மிகவும் மெத்தனத்தோடு நடந்துகொள்கிறது.
இந்தப் பிரச்னையில் இந்திய அரசு உறுதியோடு உடனடியாகச் செயல்பட்டு, தூதரகம் வாயிலாக அழுத்தத்தைக் கொடுக்கவில்லையென்றால், கைதான மீனவர்களை விடுவிக்கவும் முடியாது; இத்தகைய செயல்களைத் தடுக்கவும் முடியாது. இந்தப் பிரச்னைக்கு இந்திய அரசுடன் பேசி அமைதியான முறையில் தீர்வு காண இலங்கை விரும்புகிறதா என சந்தேகம் உள்ளது. இந்தப் பிரச்னையால் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மீனவர் சமுதாயமும் கொந்தளிப்பில் உள்ளது.
இந்திய அரசு உடனடியாக இலங்கையுடன் பேசி இலங்கைக் கடற்படை இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுவதை தடுப்பதோடு, கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். இல்லையென்றால், தமிழக மீனவர்கள் அமைதியாக வாழ்வதற்கு வழியில்லாமல் போய்விடும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.
தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!
அம்மா , நீங்கள் வாய்க்கிழிய கத்தினாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. பேசாமல் தமிழகத்தை இலங்கையுடன் இணைத்துவிட்டு நீங்கள் கொட நாடு சென்று தங்கிவிடுங்கள். தமிழ் நாட்டுத் தமிழனுக்கு தன் மானமென்பது சரித்திரத்தில் மட்டுமே உண்டு, இப்பொழுது உள்ள தமிழன் என்றோ இழந்துவிட்டான் வீரத்தையும் மானத்தையும்.