மக்களாட்சியா? வாரிசு அரசியலா?

modi_gujarat_cmநம் நாட்டுக்குத் தேவை அரசியலமைப்பின்படி செயல்படும் ஜனநாயக ஆட்சியா? அல்லது ஒரே குடும்ப ஆட்சியா? என்பதை வாக்காளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி.

வட மேற்கு தில்லி ரோஹிணியில் உள்ள “ஜப்பானிஸ் பார்க்’ திடலில் பாஜகவின் பிரமாண்டப் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப் பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியது:

மூவரின் ஆதிக்கத்தில் ஆட்சி: தில்லியில் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை மூன்று பேர் நடத்துகின்றனர். ஒருவர் தாய்; மற்றொருவர் அவரது மகன்; மூன்றாவது நபர் அந்தத் தாயின் மருமகன். இந்த மூவரின் ஆதிக்கத்தில் பிரச்னையின்றி சந்தோஷமாக இருப்பவர்தான் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித். திட்டங்களுக்கான தொடக்க விழாக்களுக்கு “ரிப்பன்’ வெட்டுவதைத் தவிர அவருக்கு வேறு முக்கிய அலுவல்கள் கிடையாது.

தில்லியில் 2010-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற முறைகேடால் நம் நாடு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை மட்டும் இழக்கவில்லை. நமது எதிர்காலத்தைச் சூறையாடிய அந்த முறைகேடு, இளம் விளையாட்டு வீரர்களின் உத்வேகத்தையும் குலைத்துவிட்டது.

ஊழலுக்கு அடிமை காங்கிரஸ்: குடிபோதையில் இருப்பவர் மதுவுக்கு அடிமையாவது போல, மத்தியிலும், சில மாநிலங்களிலும் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசுகள், “ஊழல்’ எனும் போதைக்கு அடிமையாகிவிட்டன.

நம் நாட்டில் வேலையற்ற கோடிக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு வேலை கிடைக்கும் சூழலை மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவாக்கவில்லை. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியால் இந்த இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தர முடியுமா? (மோடி இவ்வாறு கேட்டதும் கூட்டத்தில் திரண்டிருந்தவர்கள் “இல்லை’ என்றனர்).

தொலைநோக்குப் பார்வை குறைபாடு: தலைநகரில் மின் விநியோகத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகப் பல ஆண்டுகளாக பிரதேச அரசு கூறி வருகிறது. ஆனால், நகரில் இருள் சூழும் நிலைமை இன்னும் மாறவில்லை.

நெடுஞ்சாலைத் துறை மூலம் நாட்டின் பல மாநிலங்களை இணைக்கும் மிகப் பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. ஆனால், பின்னர் வந்த காங்கிரஸ் கூட்டணி அரசு அதன் பலன்களுக்கு உரிமை கொண்டாடுகிறது.

விமானப் போக்குவரத்துத் துறையில் ஏராளமான வருவாய் இழப்புகளை விமான நிறுவனங்கள் சந்திப்பதற்கு, அரசின் தெளிவற்ற கொள்கைகள் காரணமாக அமைந்தன. இத்தகைய தொலைநோக்குப் பார்வை குறைபாடால் நாட்டின் வளர்ச்சி முடங்கியுள்ளது.

வறுமை அடையாளமா?: நம் நாட்டின் வறுமை நிலையை அடையாளப்படுத்தி அமெரிக்க அதிபருடன் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு நடத்தி உதவி கோருகிறார். நமது ஏழ்மையைக் காட்டி விருதுகள் பெறுவதைப் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதை நினைக்கும்போது அவமானமாக உள்ளது.

எந்த ஆட்சி தேவை?: நம் நாடு குடும்ப ஆட்சிக்கும் ஜனநாயகத்துக்கும் இடையே சிக்கித் தவித்து வருகிறது. ஜனநாயகம் மீது பரம்பரை (வாரிசு) அரசியல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. “இளவரசர்’ விருப்பத்தின்படி ஆட்சி நடைபெற நாம் அனுமதிக்கலாமா? நாட்டுக்குத் தேவை மக்களாட்சியா? அல்லது வாரிசு அரசியலா? என்பதை வாக்காளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

“இளவரசரின் கீழ் பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன்’ என பிரதமர் கூறலாம். அதை நீங்கள் (காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள்) ஏற்றுக் கொள்வீர்களா?

கடந்த 10 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் “கறைபடிந்த குழு’ நடத்திய ஆட்சியை நாடு சந்தித்த நிலை மாற வேண்டும். 2014-இல் நம் நாட்டுக்கு “கனவு நிறைந்த குழு’ தலைமையிலான ஆட்சிதான் தேவை.

நாடு சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டன. அடுத்த எட்டு ஆண்டுகளில் அம்ருத மகோத்ஸவத்தை (பவள விழா) காணப் போகிறோம். அதற்குள்ளாக, வயோதிகர்கள் பிரச்னையின்றி இருக்கவும், ஏழைகள் உணவு, வசிப்பிடம் பெறவும், விவசாயிகள் முகத்தில் புன்னகை மலரவும், பழங்குடியினர் கல்வி வாய்ப்புகளைப் பெறவும் நாம் உறுதி ஏற்போம் என்றார் மோடி.

இக் கூட்டத்தில் பாஜக முன்னாள் தேசிய தலைவர் நிதின் கட்கரி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ரா, கட்சியின் பிரதேச தலைவர் விஜய் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். சுமார் 3 லட்சம் பேர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

TAGS: