இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது!- தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் வற்புறுத்துகின்றன!

vaiko_01கொமன்வெல்த் நாடுகளின் மாநாடு கொழும்பில் நவம்பர் 15-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்று, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன.

இந்தநிலையில் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது. ஏன்?’ என்ற விளக்கப் பொதுக்கூட்டம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் கடந்த 26-ம் தேதி நடந்தது.

அன்றைய தினம், ஈழ விடுதலைக்காக உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்த திலீபனின் 26-வது ஆண்டு நினைவு நாள் என்பதால் அவரது பெயரில் மேடை அமைக்கப்பட்டிருந்தது.

இதேபோன்று, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக விருத்தாசலத்திலும் விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

அமைப்பின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருட்டிணன்,

கொமன்வெல்த் கூட்டமைப்பின் அடிப்படை கொள்கைகளையே குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு, கொமன்வெல்த் மாநாட்டை நடத்த அருகதையே இல்லை.

எங்கோ இருக்கும் கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் எல்லாம் இலங்கையில் மாநாடு நடத்தக் கூடாது என்று போர்க்குரல் எழுப்பியுள்ளன.

கூப்பிடும் தூரத்தில் இருக்கும் நாம் என்ன செய்யப்போகிறோம்? இனப்படுகொலை செய்த ராஜபக்சவுக்கு நற்சான்றிதழ் கொடுக்க, கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த எல்லா ஏற்பாடுகளையும் கொமன்வெல்த் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக இருக்கும் கமலேஷ் சர்மா செய்து வருகிறார். அவர், இந்திய அரசின் ஐ.எஃப்.எஸ். அதிகாரி.

போர்க்குற்ற விசாரணையில் இருந்து ராஜபக்சவைத் தப்புவிக்க காங்கிரஸ் அரசு செய்யும் தந்திரம் இது.

தென்னாபிரிக்கா, நைஜீரியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, பிஜி போன்ற நாடுகள் எல்லாம் கொமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்ட நாடுகள்.

அந்த நாடுகள் செய்த அட்டூழியங்களை விட கொடுமையான குற்றங்களை செய்துள்ள இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது என்றார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்,

உறுப்பு நாடுகளின் ஆதரவு இல்லாததால் இலங்கையில் போர் அவலங்களைத் தடுக்க முடியவில்லை என்று, ஐ.நா-வின் பொதுச் செயலாளர் பான் கி மூன் இப்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அப்படிப்பட்ட ஐ.நா. மன்றம் எதற்கு இருக்கிறது? ராஜபக்சவுடன் சேர்ந்து கொண்டு மத்திய காங்கிரஸ் அரசு இனஅழிப்பு வேலைகளைச் செய்தது.

அவர்களிடம் இருந்து ஈழத் தமிழர்களுக்காக எதையும் எதிர்பார்க்க முடியாது.

ஆனால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் முதல்வர் நிறைவேற்றிய தீர்மானம் என்ன ஆனது? அதை நிறைவேற்றவில்லை என்றால், உங்களுக்கும் மத்திய அரசுக்கும் என்ன வித்தியாசம்?” என்று கொந்தளித்தார்.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ,

ஈழத் தமிழர்கள் மீது கொத்துக் குண்டுகளை, இரசாயனக் குண்டுகளை இலங்கை அரசு வீசியபோது அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது ஐ.நா. சபை.

அந்தத் திட்டமிட்ட தோல்வியை இப்போது ஒப்புக்கொண்டு விட்டனர்.

லட்சோப லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சவுக்கு கொமன்வெல்த் மாநாட்டில் தலைவராக முடிசூட்ட இந்தியா துடிக்கிறது.

அதற்காகத்தான் வடக்கு மாகாணத் தேர்தலை நடத்தி இருக்கின்றனர்.

ராஜபக்ச வேண்டாம் என்று பெரும்பான்மையான தமிழர்கள் உறுதியான தீர்ப்பை வழங்கிவிட்டனர்.

ஈழத் தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் என்பதற்கு பல ஆயிரம் காரணங்கள் உள்ளன.

எனவே, உலக நாடுகள் மேற்பார்வையில், புலம்பெயர்ந்த தமிழர்களையும் உள்ளடக்கிய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

கொமன்வெல்த் கூட்டமைப்பின் அடிப்படை கொள்கைகளையே நாசம் செய்துள்ள இலங்கையில் கொமன்வெல்த் நாடுகள் மாநாட்டை நடத்தவே கூடாது.

அதையும் மீறி நடத்தினால் கொமன்வெல்த் அமைப்பு குழிதோண்டி மூடப்பட்டுவிட்டது என்று நினைப்போம்.

இந்திய ஒருமைப்பாடு நிலைக்க, துரோகம் குப்பைத் தொட்டியில் வீசப்பட வேண்டும்.

இந்திய அரசின் தொடரும் வஞ்சகம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஈழத் தமிழர் படுகொலைகளுக்கு சர்வதேச சுதந்திர விசாரணை வேண்டும்.

புதைக்கப்பட்ட உண்மைகள் ஒரு நாள் வெளிவந்தே தீரும்.

சுதந்திர தமிழ் ஈழம் மலரும்.

எட்டு கோடி தமிழர்கள் கூப்பிடும் தூரத்தில் இருக்க, ஒன்றரை கோடி சிங்களவர்கள், ஈழத் தமிழர்களின் தாயகத்தைப் பறித்து அவர்களை வரலாற்றின் பக்கங்களில் இருந்து அழித்துத் துடைத்து எறிவதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என்று முடித்தார்.

கொமன்வெல்த் மாநாடு நடக்க இருக்கும் நாள் நெருங்கிக்கொண்டு இருப்பதால் இதற்கான எதிர்ப்பு வலுத்து வருகிறது.

TAGS: