ராஜிநாமா என்ற பேச்சுக்கே இடமில்லை

pmகுற்றப் பின்னணி உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் பதவி பறிபோகாமல் தடுக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த விவகாரத்தில் மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசியிருந்த பின்னணியில் பதவியை ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று அதிபர் பராக் ஒபாமாவுடனான பேச்சுவார்த்தையிலும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்திலும் கலந்து கொண்டு இந்தியா திரும்பும் வழியில் விமானத்தில் பிரதமர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

ராகுல்காந்தியின் கடுமையான விமர்சனத்தைத் தொடர்ந்து பிரதமர் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்க்கவே விரும்புவார் என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக விமானத்தில் பத்திரிகையாளர்கள் பகுதியில் பிரதமர் வந்து அமர்ந்தார். தனது அமெரிக்க பயணத்தின் பல்வேறு நிகழ்வுகளையும் தனது எதிர்பார்ப்புகளையும் சுருக்கமாக விளக்கிவிட்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள பிரதமர் தயார் ஆனார்.

கேள்வி: அதிபர் ஒபாமாவுடன் ராணுவ ஒத்துழைப்பு பற்றிய விவாதத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?

பதில்: இந்திய – அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பில் இதுவரை இருந்த விற்பனையாளர் – வாங்குபவர் என்கின்ற உறவிலிருந்து அடுத்தக்கட்டமான ராணுவ தளவாட உற்பத்தியில் ஒத்துழைப்பு என்கிற கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறோம். 26 விழுக்காடு வெளிநாட்டு நேரடி முதலீட்டுடன் ராணுவ தளவாட உற்பத்தியில் அமெரிக்கா அதிகமாக பங்கு பெற வேண்டும் என்கிற எனது வேண்டுகோளை மேல் எடுத்துச் செல்வதாக அதிபர் ஒபாமா உறுதியளித்தார். அதுமட்டுமல்லாமல் அணுசக்தி ஒப்பந்தத்தை பொருத்தவரை விரைவிலேயே வெஸ்டிங்ஹவுஸ் போன்ற அமெரிக்க நிறுனவங்களுடனான ஒப்பந்தம் அரசு நிலை தடங்கல்கள் ஏதும் இல்லாமல் நிறைவேற வேண்டும் என்பதில் இருவருமே ஒத்தகருத்துடையவர்களாக இருக்கிறோம். கல்வி, எரிசக்தி, சுற்றுச்சூழல் போன்ற பிரச்னைகளும் எங்களுடைய பேச்சுவார்த்தையில் இடம்பெற்றன.

கேள்வி: சமீப காலமாக அமெரிக்க வியாபார நிறுவனங்களுக்கு இந்தியாவின் மீதான நம்பிக்கை குறைவதும் இந்தியாவின் வியாபார வழிமுறைகளை கண்காணிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பதும் ஏன் என்பதற்கான காரணத்தை கேட்டறிந்தீர்களா? அமெரிக்க முதலீட்டாளர்களின் அதிருப்திக்கு காரணமென்ன?

பதில்: அமெரிக்க முதலீட்டாளர்களின், வர்த்தக நிறுவனங்களின் அதிருப்திக்கு காரணம் இந்தியப் பொருளாதாரம் சற்று பின்னடைவை சந்தித்திருப்பதுதான். 8 முதல் 9 விழுக்காடு வளர்ச்சியில் இந்தியப் பொருளாதாரம் இருந்தபோது நமது கொள்கைகளில் எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும் அவர்கள் அதை சட்டை செய்ததில்லை. இப்போது பொருளாதாரம் சற்று மந்த நிலை அடைந்திருப்பதன் விளைவுதான் இந்த அதிருப்திக்கு காரணம். இரண்டு தரப்பில் உள்ளவர்களும் இதை பேசித் தீர்த்து கொள்ளலாம் என்கிற அதிபர் ஒபாமாவின் கருத்தை நானும் ஏற்றுக்கொண்டேன்.

கேள்வி: பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் தங்களைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்ததைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: அப்படி நான் எந்தவிதமான கருத்தையும் வெளியிடவில்லை என்று அவரே தெரிவித்திருக்கிறார். மேலும் பாகிஸ்தானில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நவாஸ் ஷெரீப்பின் கரங்களை பலப்படுத்துவது அவசியம். ஒரு ஜனநாயக நாடு இன்னொரு ஜனநாயக நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும். எல்லைப் பிரச்னைகளை சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வது என்பதும் அதற்காக இருதரப்பு உயர் அதிகாரிகள் தரப்பில் குழு அமைப்பது என்றும் தீர்மானித்திருக்கிறோம். இது வெற்றி பெறும் என்று கருதுகிறேன்.

கேள்வி: தங்களைச் சந்திக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபட்சே விரும்பியதாகவும் ஆனால், அந்த சந்திப்பை தாங்கள் தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறதே? இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ் அமைப்புகளின் கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கும் வேளையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்களுக்கு அதிக அதிகாரத்தை பெற்றுத் தரும் வாய்ப்பை தாங்கள் இழந்தது ஏன்?

பதில்: இலங்கை அதிபர் என்னிடம் கடந்த மாதம் 24-ம் தேதிக்கும் 27-ம் தேதிக்கும் இடையில் ஐ.நா. வரும் போது சந்திக்க நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டிருந்தார். நேரம் கேட்டிருந்தது உண்மை. ஆனால், நியூயார்க் சென்றடைந்ததே 27-ம் தேதி மாலையில்தான் என்பதால் அவரைச் சந்திக்க இயலவில்லை. ஆரம்பம் முதலே வடக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வும் அதிக அதிகாரங்களும் தரப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தி வந்திருக்கிறது. இப்போதும் அதை வலியுறுத்துகிறோம். இந்தியாவின் முழு முனைப்பும் அதற்காக இருக்கும்.

கேள்வி: தாங்கள் அமெரிக்க அதிபரை சந்திக்க இருந்த நாளில் தங்களை அவமானப்படுத்தும் விதமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவசரச் சட்டத்தை விமர்சித்து அறிக்கை வெளியிட்டது சரிதானா?

பதில்: விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உண்டு. காங்கிரஸ் அடிப்படை உறுப்பினராக இருந்தாலும் அமைச்சரவை சகாவாக இருந்தாலும் கட்சியின் மூத்த தலைவராக இருந்தாலும் பிரச்னைகளை எழுப்புவதும் விவாதிப்பதும் ஜனநாயகத்தில் புதிதல்ல. அதுதான் ஜனநாயகம் என்று கருதுகிறேன். ஒரு முக்கியமான கருத்தை ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். இதை எனக்கு முன்பு கடிதமாக எழுதியிருந்தார். இந்தியா திரும்பியதும் அமைச்சரவையில் இதுபற்றி விவாதிக்கப்படும்.

கேள்வி:÷ஒரு முக்கியமான நிகழ்வின் போது இப்படி அறிக்கை வெளியிட்டிருப்பது தங்களுக்கு அவமானமாகப் படவில்லையா?

பதில்: வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களையும் வெற்றி தோல்விகளையும் சந்தித்தவன் நான். ஆகவே இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் ஏன் இப்படி ஓர் அறிக்கையை நான் அதிபர் ஒபாமாவை சந்திக்கும் வேளையில் வெளியிட்டார் என்கிற காரணம் எனக்குத் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக்குழுவும் இரண்டு முறை அமைச்சரவையும் சந்தித்து எடுத்த முடிவுதான் இந்த அவசரச் சட்டம் என்பது.

கேள்வி: இந்தப் பிரச்னையில் ராஜிநாமா செய்யும் எண்ணம் தங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?

பதில்: ராஜிநாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தப் பிரச்னை குறித்து நாடு திரும்பியதும் அமைச்சரவை சகாக்களுடன் விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

கேள்வி: தேசிய அளவில் நரேந்திர மோடி பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கு ஆபத்து என்று கருதுகிறீர்களா?

பதில்: எல்லா மதச்சார்பற்ற அமைப்புகளும் ஓரணியில் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது நடக்கும் என்று நான் கருதுகிறேன்.

கேள்வி: உங்களுடைய 10 ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகள் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் ஆட்சி அமைக்க உதவும் என்று கருதுகிறீர்களா?

பதில்: இப்போதே இதுபற்றி கருத்து சொல்வதற்கில்லை. மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். எங்கள் ஆட்சியில் சில குறைகளும் சில தவறுகளும் நடந்திருந்தாலும் பல நல்ல செயல்பாடுகளும் இருக்கின்றன. இந்திய மக்கள் சகிப்புத்தன்மை உடையவர்கள், பெரும்தன்மையானவர்கள், அவர்கள் எங்களுடைய நல்ல செயல்பாடுகளை மட்டும் கவனித்தில் கொண்டு மீண்டும் ஆட்சி அமைக்க எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

TAGS: