தண்டிக்கப்பட்ட உறுப்பினர்களை பாதுகாக்கும் அவசர சட்டம் வாபஸ்

rahul_manmohanஇந்தியாவின் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் தொடர்ந்தும் நீடிக்க வகைசெய்யும் அவசர சட்டத்தை இந்திய நடுவணரசு புதனன்று திரும்பப்பெற்றுள்ளது.

இந்த அவசர சட்டம் முட்டாள்தனமானது என்று இந்திய நடுவணரசின் கூட்டணிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக சாடியதைத்தொடர்ந்து, இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள இந்த அவசர சட்டம் திரும்பப்பெறப்பட்டிருக்கிறது.

இந்த அவசர சட்டத்தை தனது அமைச்சரவையில் வைத்து ஒப்புதல் பெற்று குடியர்சுத்தலைவருக்கு அனுப்பிய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை, புதனன்று காலை ராகுல்காந்தி நேரில் சந்தித்ததைத் தொடர்ந்து, மாலையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த அவசர சட்டத்தை முறையாக திரும்பப்பெறும் முடிவு எடுக்கப்பட்டதாக, மத்திய அமைச்சர் நாராயணசாமி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்தியாவின் மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சித் தலைமை வகிப்பதாக தெரிவித்த நாராயணசாமி, அப்படியிருக்கும்போது காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரின் கருத்தை ஏற்று மத்திய அரசு இந்த அவசர சட்டத்தை திரும்பப்பெற்றதில் தவறில்லை என்று வாதிட்டார்.

குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக தங்களின் பதவிகளை இழக்கவேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் சமீபத்தில் அளித்த சர்ச்சைக்குரிய தீர்ப்பைத் தொடர்ந்து, இந்த அவசரசட்டத்தை இந்திய நடுவணரசு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியது. -BBC

TAGS: