தெலங்கானா தனி மாநிலம் அமைக்க எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

raj1தெலங்கானா தனி மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் விஜயவாடா மக்களவைத் தொகுதி உறுப்பினருமான லகடபதி ராஜகோபால் கூறினார்.

தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தனித் தெலங்கானா அமைக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவு ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி தலைமையிலான அவரது ஆதரவாளர்களும் மத்திய அமைச்சரவையின் முடிவால் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சரவையின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராஜகோபால் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

“ஒரு மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் முன்பு அம்மாநிலத்தில் வசிக்கும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மத்திய அமைச்சரவை தனி மாநில முடிவை மேற்கொண்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்துக்கும் ஜனநாயகக் கட்டமைப்புக்கும் எதிரான இந்த நடவடிக்கையை எதிர்த்து நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கொடரவுள்ளேன். தெலங்கானா அமைக்கக் கோரி ஆந்திர சட்டப்பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானம் தோல்வி அடையும். இது தொடர்பாக ஆந்திர மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டியும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்’ என்றார் ராஜகோபால்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட லகடபதி ராஜகோபால் அம்மாநிலத்தைச் சேர்ந்த இரண்டாவது பணக்கார மக்கள் பிரதிநிதியாகக் கருதப்படுகிறார். அவரது சொத்து மதிப்பு ரூ. 122 கோடியாகும். லான்கோ குழுமமும் விஜயவாடா தொகுதியில் ஏராளமான ரியல் எஸ்டேட் நிலங்களும் இவருக்கு சொந்தமானது. 2003-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி 2000 கிலோ மீட்டர் தூரம் கொண்ட “நமது ராஜ்ஜியம்’ என்ற பாத யாத்திரையை மேற்கொண்டார். அப்போது அவரது தலைமையை ஏற்று காங்கிரஸில் சேர்ந்த ராஜகோபால் 2004, 2009 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

TAGS: