புத்தூரில் வீடு சுற்றிவளைப்பு: 2 தீவிரவாதிகள் கைது

bilalஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை போலீஸார் 12 மணிநேர கடும் போராட்டத்துக்குப் பிறகு சனிக்கிழமை கைது செய்தனர். அவர்கள் இருவரும் திருமலையில் நடைபெறும் பிரம்மோற்ஸவத்தை சீர்குலைப்பதற்காக வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

புத்தூரில் ரயில்வே கேட் அருகில் உள்ள மேகர வீதியில் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அதிகாலை 3.30 மணியளவில் பாதுகாப்புப் பிரிவு ஐ.ஜி. கண்ணப்பன் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் அன்பு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரூபேஷ்குமார் மீனா, ஆகியோர் தலைமையில்

சிபிசிஐடி போலீஸார், அதிரடி படையினர், மத்திய பாதுகாப்புப் பிரிவின் ஆக்டோபஸ் பிரிவினர் ஆகியோர் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

சுமார் 12 மணி நேர கடும் போராட்டத்துக்குப் பின் உள்ளே பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய இருவரும் சரணடைந்தனர்.

பிடிபட்ட தீவிரவாதிகளில் ஒருவரான பிலால் மாலிக்கின் மனைவி ஹசினா பானு (32) மற்றும் அவரது 2 சிறு வயது மகன்களையும் ஒரு பெண் குழந்தையையும் போலீஸார் மீட்டனர்.

வீட்டுக்குள் யார் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய பால்காரர் போல் சென்ற சிறப்பு புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமணனை, வீட்டுக்குள் இருந்த பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோர் பிடித்து இழுத்துச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து, வெளியில் நின்ற போலீஸார் லட்சுமணனை மீட்பதற்காக துப்பாக்கியால் சுட்டதில், இஸ்மாயிலின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உதவி காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், ரத்தக் காயங்களுடன் கிடந்த லட்சுமணனை வீட்டுக்குள் இருந்து மீட்டு வந்தார். உடனடியாக அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தீவிரவாதிகளை சரணடையும்படி தொடர்ந்து போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் அதைப் பொருள்படுத்தவில்லை. இதையடுத்து சுற்றுப் பகுதிகளில் உள்ள 300 குடும்பங்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டின் மின்இணைப்பையும் துண்டித்தனர்.

பிற்பகல் 3 மணி வரை போலீஸார் மேற்கொண்ட முயற்சி பலனளிக்காத நிலையில், வீட்டின் பின்புற சுவற்றில் துளையிட்டு கண்ணீர்ப் புகையை வீட்டுக்குள் செலுத்தத் தொடங்கினர். அதையடுத்து பிலால் மனைவி ஹசினா பானு (32), அவரது குழந்தைகள் ஹம்சா (5), பாத்திமா (3), யாசிப் (1) ஆகியோருடன் வெளியே வந்தார். சிறிது நேரத்தில் வயிற்றில் குண்டு காயத்துடன் காணப்பட்ட பன்னா இஸ்மாயில் வெளியே வந்தார். அவரை போலீஸார் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பிவைத்தனர்.

சிறிது நேரத்துக்குப் பிறகு பிலால் மாலிக்கும் வெளிவந்தார். அவர் கையில் வைத்திருந்த கத்தியை போலீஸார் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து வீட்டுக்குள் போலீஸார் நுழைந்து சோதனையிட்டதில் நவீனரக துப்பாக்கி, வெடிகுண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். .

சதி முறியடிப்பு: பிலால் மாலிக்கும், பன்னா இஸ்மாயிலும் திருப்பதி திருமலையில் நடைபெற்று வரும் பிரம்மோற்ஸவத்தை சீர்குலைக்கும் வகையில் வெடிகுண்டு வைப்பதற்காக சதித் திட்டம் தீட்டியிருப்பதும், குறிப்பாக கருட சேவையின்போது பயன்படுத்தும் குடையில் வெடிகுண்டு வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதும் உளவுத் துறை மூலம் திருமலை பாதுகாப்புத் துறை பிரிவு ஐஜி மகேஷ் பகவத்துக்கு 3 நாள்கள் முன்பு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து திருமலைக்கு வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதித்து வருகின்றனர்.

தேடப்படும் குற்றவாளிகள்: ஏற்கெனவே சென்னையில் பிடிபட்ட போலீஸ் பக்ருதீன், புத்தூரில் கைது செய்யப்பட்டுள்ள பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோர் தமிழக போலீஸாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் ஆவர்.

கடந்த ஜூலை 1-ஆம் தேதி வேலூரில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன், ஜூலை 19-ஆம் தேதி சேலத்தில் கொலை செய்யப்பட்ட பாஜக மாநில பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரின் கொலை வழக்குகள் தொடர்பாகவும், மதுரையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி செல்லவிருந்த பாதையில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கு தொடர்பாகவும் இவர்கள் தேடப்பட்டு வந்தனர்.

இவர்கள் மூவரைத் தவிர, இன்னும் தலைமறைவாக உள்ள நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்கும் தேடப்பட்டு வருபவர்களில் ஒருவராவார். இவர்களைப் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என காவல் துறை அறிவித்திருந்தது.

TAGS: