பா.ம.க. தலைமையில் தனி அணி: 45 ஜாதி சங்கங்களின் தலைவர்கள் கோரிக்கை

ramadoss_indiaவரும் தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி அமைத்து போட்டியிட வேண்டும் என 45 ஜாதி சங்கங்களின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இளவரசன் – திவ்யா காதல் திருமணத்தால் தருமபுரியில் ஏற்பட்ட மாவட்டங்கள்தோறும் ஜாதி அமைப்புகளின் தலைவர்களின் கூட்டத்தை ராமதாஸ் நடத்தினார். அதன் விளைவாக தொடங்கப்பட்ட அனைத்து சமுதாயப் பேரியக்கம் சார்பில் ஜாதி சங்க தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாமக தலைவர் ஜி.கே. மணி, தேசிய பார்வர்டு பிளாக் தலைவர் பி.டி. அரசக்குமார், கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஜி.கே. நாகராஜ், யாதவ மகாசபையின் தலைவர் டி. தேவநாதன், செங்குந்தர்- பிள்ளைமார் கூட்டமைப்பின் தலைவர் கே. ராஜன், தமிழக மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் சலிமுதீன் உள்பட 45 சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும், மீனவர்களைப் பாதுகாக்க கச்சத் தீவை மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து அனைத்து சமுதாயப் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பி.டி. அரசக்குமார், ஜி.கே. நாகராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:

எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஆகியோரை ராமதாஸ் தலைமையில் சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திமுகவும், அதிமுகவும் தமிழக மக்களை ஜாதிவாரியாக பிரித்து ஆதாயம் தேடி வருகின்றன.

அரசியல் அதிகாரத்தை அடையாமல் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றனர்.

இது குறித்து ராமதாஸ் தலைமையில் முக்கியத் தலைவர்கள் கூடி முடிவெடுக்க இருக்கிறோம்.

பேசுவதை தவிர்த்த ராமதாஸ்

மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுதலையான அவருக்கு சென்னையில் இதய அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு கடந்த 6 மாதங்களாக பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்த ராமதாஸ் முதல் முறையாக ஜாதி சங்கத் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்றார். அவரிடம் கேள்விகள் கேட்க காத்திருந்த செய்தியாளர்களிடம், தனக்குப் பதிலாக அரசக்குமார் பதிலளிப்பார் எனக் கூறி பேசுவதை தவிர்த்தார் ராமதாஸ்.

TAGS: