இஸ்தான்புல், அக்.6- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி துருக்கி நாட்டுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் நாளிதழ் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் கட்டமைப்புகள் அனைத்தும் கலைக்கப்படவேண்டும். இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியின்படி பாகிஸ்தான் நடந்துகொள்ள வேண்டும். தீவிரவாதிகள் இந்தியாவின்மீது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்கு தனது மண்ணை பயன்படுத்துவதை பாகிஸ்தான் அனுமதிக்கக்கூடாது.
இந்த நிலையை உருவாக்காதது வரையில். மற்ற வளர்ச்சிகள்பற்றி நீங்கள் (பாகிஸ்தான்) எப்படி பேச முடியும்? எனவே, நவாஸ் ஷெரீப் என்ன சொன்னாரோ, அதை நிறைவேற்ற முயற்சி செய்வார் என நாங்கள் நம்புகிறோம்.
இந்த விஷயத்தில் பாகிஸ்தான் தீவிர முயற்சி எடுக்க வேண்டும். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்துதான் இந்தியாவின் மீது தீவிரவாத செயல்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர் நிறுத்த உடன்படிக்கையும் மீறப்பட்டு வருகிறது.
1972-ம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, பாகிஸ்தான் பிரதமர் ஜூல்பிகர் அலி பூட்டோ ஆகியோர் செய்துகொண்ட சிம்லா உடன்படிக்கையின் அடிப்படையில், பிரச்சினைகளைப் பேசி தீர்த்துக்கொள்வதற்கு தங்களது அதிகாரிகள், ராணுவ உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட இரு நாட்டு பிரதமர்களும் இப்போது ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது.
எல்லாப் பிரச்சினைகளையும் நாம் தீர்த்துக்கொள்ள இந்த சிம்லா ஒப்பந்த அம்சங்கள் உதவும்.
தன் மண்ணை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது என பாகிஸ்தான் 2004-ம் ஆண்டு வாக்குறுதி அளித்துள்ளது.
இருப்பினும் பெரும்பாலான தீவிரவாத செயல்கள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்துதான் இந்தியாவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படுகின்றன. எனவே நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் இடையே இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில், இந்தியா இதற்கு முக்கியத்துவம் அளித்தது.
இந்தியா அமைதியான, நட்பு ரீதியிலான, ஒத்துழைப்புடன் கூடிய உறவையே பாகிஸ்தானுடன் வைத்துக்கொள்ள விரும்புகிறது.
2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் சதிகாரர்களை சட்டத்தின் முன் நிறுத்த பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை, கட்டமைப்புகளை மூடுவதற்கு அந்த நாடு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
சிம்லா உடன்படிக்கையின் அடிப்படையில், அர்த்தமுள்ள பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவேண்டுமானால் அதற்கு எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் எல்லை தாண்டிய தீவிரவாதம், வன்முறைகள் இல்லாத நிலை வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.