வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளதற்கு அந்தக் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆதரவு தெரிவித்துள்ளார். மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த அத்வானி, இப்போது அவருடைய இந்தக் கருத்தை வழிமொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக தனது வலைத்தளத்தில் அத்வானி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று பதிவு செய்வதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள யோசனையை வரவேற்கிறேன். அத்துடன், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதையும் கட்டாயமாக்க வேண்டும்.
இந்திய அரசியல் சாசனத்தின்படி, வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்களிப்பதற்கான உரிமை உள்ளது. ஆனால், வாக்காளர்கள் பலரும் நியாயமான காரணம் ஏதுமின்றி, தங்களது வாக்குரிமையைச் செலுத்தாமல் இருக்கின்றனர். இதன்மூலம், இத்தகைய வாக்காளர்கள் தாங்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை மறைமுகமாக வெளிப்படுத்துகின்றனர்.
எனவே, வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கினால்தான், யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்யும் வசதி அர்த்தமுள்ளதாக இருக்கும்.
வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் இரண்டு முறை நிறைவேற்றிய ஒரே மாநிலம் குஜராத் மட்டுமே. ஆனால், இந்த மசோதாவுக்கு அந்த மாநில ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ ஒப்புதல் அளிக்கவில்லை.
வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதை உலகில் 31 நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன. எனினும், இவற்றில் சுமார் 12 நாடுகளில் மட்டுமே இது மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது.
இது விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள யோசனைகள் மற்றும் 31 நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டாய வாக்களிப்புச் சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் யோசனைப்படி, 5 மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் இருந்தே யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதைப் பதிவு செய்வதற்கான வசதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்படுத்தப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
இதுதொடர்பாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி பத்திரிகைகளில் பல்வேறு கட்டுரைகள் எழுதியிருப்பதும் பாராட்டுக்குரியது என்று அத்வானி குறிப்பிட்டுள்ளார்.