இரு நாட்டு மீனவர்களே சந்தித்து பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்: இந்தியா – இலங்கை முடிவு

c07dsalmaஇலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கு இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் சந்தித்து தீர்வு காண வேண்டும் என்று இந்தியாவும் இலங்கையும் உடன்பாடு கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி ஏற்ற பின்பு, முதல் முறையாக இலங்கைக்கு அரசுமுறையாக சல்மான் குர்ஷித் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவரை, இலங்கையின் சமூக சேவைத்துறை அமைச்சர் பெலிக்ஸ் பெரேரா, இலங்கைக்கான இந்திய தூதர் ஒய்.கே. சின்ஹா ஆகியோர் கொழும்பு விமான நிலையத்தில் திங்கள்கிழமை வரவேற்றனர்.

இதையடுத்து, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீûஸ அவரது அலுவலகத்தில் சல்மான் குர்ஷித் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சல்மான் குர்ஷித் கூறியது:

மீனவர் பிரச்னை: மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தப் பிரச்னைக்கு இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் சந்தித்து அவர்களே சிறந்த தீர்வுகாண வேண்டும் என உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த வழிவகை செய்யப்படும். மீனவர் பிரச்னையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அரசியல் தீர்வு: இலங்கை மாகாணத் தேர்தல் முடிவுகளின் மூலம் வடக்கு மாகாண மக்களுக்கு சிறந்த எதிர்காலம் உருவாக்கியுள்ளது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்கள் தன்மானத்துடனும், சுயமரியாதையுடனும், சமத்துவத்துடனும் வாழ விரைவில் அரசியல் தீர்வும், அதிகாரப் பகிர்வும் செய்ய வேண்டும்.

இலங்கையின் 13வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்படும் என்று இந்தியாவுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் அளித்த வாக்குறுதியை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இலங்கையில் வாழும் அனைத்து தரப்பினரிடையே ஒருமித்த கருத்து ஏற்படும் வகையில் கால நிர்ணயம் செய்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும்.

இதற்கான கால நிர்ணயம் எதையும் இந்தியா நிர்ணயிக்கவில்லை. எந்தவகையான தீர்வு காண வேண்டும் என்பதை இலங்கை அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இதற்கு இந்தியா முழு ஒத்துழைப்பை அளிக்கும்.

காமன்வெல்த் மாநாடு: இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது, அப்போது நிலவும் சூழ்நிலையைப் பொருத்தே அமையும்.

இதற்கான முடிவை உரிய நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் எடுப்பார் என்றார் குர்ஷித்.

போரினால் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ள மக்களின் மேம்பாட்டுக்காக இந்திய அரசின் நிதி உதவிடன் மேற்கொள்ளப்பட்டு வரும் குடியிருப்பு, ரயில்பாதை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து சல்மான் குர்ஷித் ஆலோசனை நடத்தினார். 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சம்பூர் அனல் மின் திட்டம் உள்பட இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ராஜபட்சவுடன் குர்ஷித் இன்று சந்திப்பு
இலங்கை அதிபர் ராஜபட்சவை சல்மான் குர்ஷித் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, 1987ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும். இலங்கையின் 13வது சட்டத்திருத்தம் அடிப்படையில் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

இந்திய மீனவர் பிரச்னை, போர் படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது, இரு நாடுகளிடையே வர்த்தகத்தை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் முதல்வராக பதவி ஏற்ற இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சி.வி. விக்னேஸ்வரனை அமைச்சர் சல்மான் குர்ஷித் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS: