வேலூரில், டாக்டர் அரவிந்த் ரெட்டியை கொன்றதாக, ஏற்கனவே ரவுடி வசூர் ராஜா உள்ளிட்ட, ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கொன்றது நாங்கள் தான் என, ‘போலீஸ்’ பக்ருதீன் கூறியிருப்பது, வேலூர் போலீசார் மத்தி யில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
பா.ஜ., கட்சியின் மாநில மருத்துவ அணி செயலர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, வேலூர் கொசப்பேட்டையில் உள்ள, அவரது கிளினிக் எதிரில், காரில் ஏறும் போது, 2012, செப்., 23ம் தேதி இரவு, 8:00 மணிக்கு கொல்லப்பட்டார். இதுகுறித்து, வேலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தினர்.
வேலூர் மத்திய சிறையில் இருந்தபடி, ரவுடி வசூர் ராஜா, ரெட்டியை கொலை செய்ததாக, அப்போதைய வேலூர் எஸ்.பி., ஈஸ்வரன் கூறினார். அதன் பின், வேலூர் ஓல்டு டவுனைச் சேர்ந்த தங்கராஜ், பிச்சை பெருமாள், தோட்டப்பாளையத்தை சேர்ந்த சத்யா, உதயா என்ற உதயகுமார், அரியூரை சேர்ந்த ராஜா மற்றும் திட்டம் போட்ட வசூர் ராஜா என, ஆறு பேரை நவம்பர், 22ம் தேதி கைது செய்தனர். ராஜாவை கடலூர் சிறையிலும், மற்றவர்களை சென்னை புழல் சிறையிலும் அடைத்தனர். இந்நிலையில், ‘அரவிந்த் ரெட்டியை கொலை செய்தது, நாங்கள் தான்’ என, பயங்கர வாதி, ‘போலீஸ்’ பக்ரூதீன் வாக்கு மூலம் அளித்திருப்பது, போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் தெற்கு போலீசார் இந்த வழக்கை விரைந்து முடித்து, நல்ல பெயர் எடுப்பதற்காக, ரவுடி வசூர் ராஜா உள்ளிட்ட, ஆறு பேரை பலி கடா ஆக்கி விட்டதாகவும், அவரை, நான்கு நாள் போலீஸ் காவலில் எடுத்து, ரெட்டியை கொலை செய்ததாக ஒப்பு கொள்ள வைத்து, வழக்கை முடித்து விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், ரெட்டி கொலை வழக்கை மீண்டும் விசாரணை நடத்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்ட மிட்டுள்ளனர். இதை அறிந்த வேலூர் தெற்கு போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர். பக்ருதீன் கூறியது உண்மை என நிரூபிக்கப்பட்டால், வசூர் ராஜாவை கொலையாளி என, அப்போது அடையாளம் காட்டிய அப்போதைய எஸ்.பி., ஈஸ்வரன், வேலூர் டி.எஸ்.பி., தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர் அண்ணா துரை ஆகியோர் மீது, துறை ரீதியான விசாரணை நடத்தி, தவறு உறுதியானால், தண்டிக்க வாய்ப்பு உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ரெட்டி கொலை வழக்கில் ஏற்பட்டுள்ள மர்ம முடிச்சுக்களை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தான் கண்டுபிடிக்க வேண்டும். இந்த வழக்கில், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கா விட்டால், பக்ரூதீன் கைது செய்யப்பட்ட வழக்கு திசை மாறி விடும், என பாரதிய ஜனதா மற்றும் இந்து முன்னணி பிரமுகர்கள் கூறுகின்றனர்.
இந்து அமைப்பு நிர்வாகிகள் கொலை செய்யப்பட்ட பின், தமிழக முதல்வர் உத்தரவு படி, வேலூர் நகரம் முழுவதும், போலீஸ் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. கொலையாளிகள் படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப் பட்டது. அதன் பின், கொலையாளிகள் சர்வ சாதாரணமாக நடமாடியுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களில், கொலையாளிகளை கண்டுபிடித்து, சுலபத்தில் பிடித்திருக்கலாம். ஏன் போலீசார் பிடிக்காமல் விட்டனர் என, சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
ஆந்திராவில் நடக்கிற பிரச்சனையை திசை திருப்ப, நாடகத்தை நல்லா அரங்கேற்றுங்கப்பா.