தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: பொதுநல வழக்கு

tamil rafugeesசென்னை, அக்.9- தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் பி.அருள்மொழிமாறன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

இந்திய பாராளுமன்றத்தில், 1983-ம் ஆண்டு சட்டவிரோத குடியேற்ற சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சட்டம் முழுவதும் சட்டவிரோதமானது. எனவே அந்த சட்டத்தை ரத்து செய்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டு 12-7-2005 அன்று தீர்ப்பளித்துள்ளது.

பூடான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு குடியேறிய ‘சக்காஷ்’ என்ற இனத்தை சேர்ந்த 65 ஆயிரம் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேசிய மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சக்காஷ் இன மக்களுக்கு குடியுரிமை வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு லட்சம் இலங்கை தமிழ் அகதிகள் வாழ்கின்றனர். அதில் 70 ஆயிரம் பேர் 115 அகதிகள் முகாம்களிலும், 35 ஆயிரம் பேர் வெளியிலும் வசிக்கின்றனர். இவர்களும், சக்காஷ் இன மக்களை போல், 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் வாழ்கின்றனர்.

ஓரு மனிதனின் ஆயுள்காலம் சுமார் 60 அல்லது 70 ஆண்டுகள் ஆகும். அதில், 30 ஆண்டுகளுக்கு மேல் குடியுரிமை இல்லாமல் வாழ்வது என்பது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மனித தன்மைக்கு எதிரானது.

தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் இலங்கை தமிழ் அகதிகள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

TAGS: