தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.லட்சுமணனை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். லட்சுமணனின் மனைவி மதுபென்னிடம், ரூ.15 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் வழங்கினார்.
ஆந்திர மாநிலம் புத்தூரில் தலைமறைவாக இருந்த தீவிரவாதிகளைப் பிடிக்கும்போது சிறப்புப் பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் எஸ்.லட்சுமணன், குற்றவாளிகளால் கொடூரமான ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்பட்டார். அவர் உடனடியாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
லட்சுமணனின் துணிச்சலைப் பாராட்டி தமிழக அரசின் சார்பில் ரொக்கப் பரிசாக ரூ.15 லட்சம் வழங்குவதோடு, அவருடைய மருத்துவச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லட்சுமணனை புதன்கிழமை நேரில் சந்தித்தார் முதல்வர். அவருக்கு ஆறுதல் கூறியதுடன், தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.
அப்போது லட்சுமணனிடம் முதல்வர் ஜெயலலிதா கூறியது:
நீங்கள் உயிர் பிழைத்தது கடவுள் செயல். ஏனென்றால் உயிரோடு இருந்து இன்னும் ஆற்ற வேண்டிய கடமைகள் உங்களுக்கு நிறைய இருக்கின்றன. உங்களது மருத்துவ அறிக்கையைப் பார்த்தேன். இனி பயப்பட ஒன்றுமில்லை. உங்களுடைய மருத்துவச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும். எந்த உதவி தேவைப்பட்டாலும் நாங்கள் செய்வோம்.
ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசும், ஒருபடி பதவி உயர்வும் அளிக்கப்படும். அதனால் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் குழந்தைகளைப் பற்றியும் கவலை வேண்டாம். அவர்களுடைய எதிர்காலத்துக்கு அரசு உத்தரவாதம் தரும். உங்களது மருத்துவ அறிக்கையைப் பார்க்கும்போது நீங்கள் எப்படி உயிர் பிழைத்தீர்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது.
உங்களை கடவுள் காப்பாற்றியிருக்கிறார் என்று சொல்லும்போது நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளது. உங்களை நினைத்து நாங்கள் அனைவரும் பெருமை கொள்கிறோம். காவல் துறையில் ஒரு வீரன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம். அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறீர்கள் என்று பாரட்டினார் முதல்வர் ஜெயலலிதா.
மனைவியிடம் ரொக்கப் பரிசு: லட்சுமணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ.15 லட்சத்துக்கான காசோலையை அவரது மனைவி மதுபென்னிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
மேலும், மருத்துவர்களிடம் லட்சுமணன் இயல்பு நிலைக்கு விரைந்து திரும்பிடத் தேவையான அனைத்து சிறப்பு சிகிச்சைகளையும் அளிக்க அறிவுறுத்தினார்.
இப்படி திடீர் திடீர் என்று சில நல்ல காரியங்கள் செய்யும் போது உங்களை வாழ்த்தத் தோன்றுகிறது. வாழ்த்துகிறேன் முதல்வரே!