உலக முட்டை தினம்: 50,000 முட்டைகள் இலவசமாக விநியோகம்

eggsஉலக முட்டை தினத்தையொட்டி, முட்டை நுகர்வின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் நகரில் வெள்ளிக்கிழமை 50 ஆயிரம் அவித்த முட்டைகள் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் நடந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து, இலவச முட்டை விநியோகத்தைத் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியது:

இந்திய அளவில் ஆண்டுக்கு 8 ஆயிரம் கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில், ஆந்திரம் முதலிடமும், தமிழகம் இரண்டாமிடமும் வகிக்கின்றன.

தமிழகத்தில் ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. அதில் பெரும் பங்கு நாமக்கல் மாவட்டம் வகிக்கிறது. இந்த மாவட்டத்தில் நாளொன்றுக்கு 2.80 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்திய கோழி முட்டை ஏற்றுமதியில் நாமக்கல் 90 சதம் பங்கு வகிக்கிறது. அதற்கு நாமக்கல் முட்டைகளின் தரமே காரணம் என்றார் அவர்.

தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.நல்லதம்பி வரவேற்று பேசினார்.நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லுôரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் கொ. ஆ. துரைசாமி பேசியது:

ஒரு மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கு ஆண்டுக்கு சராசரியாக 180 முட்டைகள் சாப்பிட வேண்டும். ஆனால், இந்தியாவில் சராசரியாக 52 முட்டைகளே சாப்பிடுகின்றனர். பண்ணைக் கோழிகள் சேவல் மூலம் கருத்தரிக்கப்படுவதில்லை என்பதால், அதன் முட்டை சைவ உணவு வகையைச் சேர்ந்ததாகும். கலப்படம் செய்ய முடியாத உணவாக விளங்கும் முட்டை, எலும்பு முறிவு சிகிச்சைக்குப் பயன்படுகிறது. இதனால், உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகாது என்றார் அவர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (என்இசிசி) நாமக்கல் மண்டலத் தலைவர் பொ.செல்வராஜ் பேசியது:

கடந்தாண்டைக் காட்டிலும் 40 லட்சம் முட்டைகள் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. எனினும், உற்பத்திச் செலவைக் காட்டிலும் முட்டையைக் குறைத்து விற்பனை செய்யும் நிலை உள்ளது. கடந்தாண்டு ஒரு லட்சம் கோழிக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது என்றார் அவர்.

TAGS: