தில்லியில் உள்ள ஆந்திரப் பிரதேச அரசு விருந்தினர் இல்ல வளாகத்தில் கடந்த ஐந்து நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அவரது கட்சித் தொண்டர்களையும் அப் பகுதியில் இருந்து போலீஸார் வெளியேற்றினர்.
இதையடுத்து, உடல்நிலை பலவீனமாகக் காணப்படும் சந்திரபாபு நாயுடு தில்லி ராம் மனோகர் லோஹியா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.
அனுமதியின்றி உண்ணாவிரதம்: நாட்டின் 29-ஆவது மாநிலமாக தெலங்கானாவை உருவாக்க மத்திய அமைச்சரவை கடந்த 3-ஆம் தேதி ஒப்புதல் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி ஜஸ்வ்ந்த் சிங் சாலையில் உள்ள ஆந்திரபவன் வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் சந்திரபாபு நாயுடு. அவருக்கு ஆதரவு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆந்திர பவனுக்கு வந்தனர். மேலும், கட்சித் தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.
இந் நிலையில், செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர பவனின் உள்ளுறை ஆணையர் சஷாந்த் கோயல் நோட்டீஸ் அனுப்பினார். அதில், “சட்டவிரோதமாக அரசு விருந்தினர் மாளிகையில் போராட்டம் நடத்தும் உங்களை ஏன் வெளியேற்றக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டிருந்தார்.
உள்துறை தலையிட மறுப்பு: ஆனால், அதைப் பொருள்படுத்தாமல் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் சந்திரபாபு நாயுடு போராட்டத்தைத் தொடர்ந்தார். இதையடுத்து, அவரையும், தெலுங்கு தேசம் கட்சியினரையும் வெளியேற்ற மத்திய உள்துறையின் உதவியை ஆந்திர பவன் உள்ளுறை ஆணையர் கோரினார். ஆனால், “இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிடாது’ என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.
போலீஸ் வரவழைப்பு: இந் நிலையில், ஐந்தாவது நாளாக வெள்ளிக்கிழமையும் உண்ணாவிரதம் இருந்த சந்திரபாபு நாயுடுவை ஆந்திர பவனில் இருந்து வெளியேற்ற ஆந்திர பவனுக்கு தில்லி போலீஸார் வரவழைக்கப்பட்டனர். சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலையைப் பரிசோதிக்க ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் குழுவினர் வந்தனர். அவர்கள் சந்திரபாபு நாயுடுவின் உடலைப் பரிசோதித்து, “ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு குறைவாக உள்ளது. எனவே, மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினர். ஆனால், அதற்கு உடன்பட சந்திரபாபு நாயுடு மறுத்தார். அதைத் தொடர்ந்து, அவரை போலீஸார் வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அப்போது தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப் பகுதியில் பதற்றமான சூழல் உருவானதால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் செல்ல சந்திரபாபு நாயுடு ஒப்புக் கொண்டார்.
மருத்துவமனையில் போராட்டம்: அதைத் தொடர்ந்து, சந்திரபாபு நாயுடுவை ராம் மனோஹர் லோஹியா மருத்துவனையில் மாலை 5.30 மணியளவில் போலீஸார் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், “உண்ணாவிரதம் காரணமாக உங்கள் வயிற்றில் கிருமித் தொற்று அதிகமாகி நீர்மச்சத்து குறைந்து விட்டது. எனவே, திரவ உணவாவது அருந்துங்கள்’ எனக் கேட்டுக் கொண்டனர். ஆனால், உணவு உட்கொள்ள பிடிவாதமாக மறுத்த அவர், “உண்ணாவிரதத்தை மருத்துவமனையிலேயே தொடருகிறேன்’ என்று கூறினார்.
கட்சியினர் வெளியேற்றம்: இதற்கிடையே, ஆந்திர பவனில் தெலுங்கு தேசம் கட்சியினர் அமைத்திருந்த உண்ணாவிரப் பந்தல், சுவரொட்டிகளை அம் மாநில அரசு ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். ஆந்திர பவனில் அனுமதியின்றி தங்கியிருந்த சில தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர்களையும் ஊழியர்கள் வெளியேற்றினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜஸ்வந்த் சிங் சாலையில் உள்ள அரசுக் குடியிருப்புகளில் தங்கியுள்ளவர்கள் நீங்கலாக வெளி நபர்களும், வாகனங்களும் அப் பகுதியில் நுழைய போலீஸார் தடை விதித்துள்ளனர்.