பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க சாதகமான சூழல் இல்லை

salman_khurshid_indian_foreign_ministerபாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்படவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

இந்தோனேசிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, சனிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்குடன் சிறப்பு விமானத்தில் தில்லி திரும்புகையில் செய்தியாளர்களுக்கு சல்மான் குர்ஷித் அளித்த பேட்டி:

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த சம்பவங்கள் நிலைமையை மோசமாக்கியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான சாதகமான சூழல் உருவாகவில்லை.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தையானது, இரு தரப்பு உறவுகள் மோசமடைந்ததையடுத்து நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, நிறுத்தப்பட்ட அந்த ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தையை எப்படித் தொடரலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக இரு நாட்டுப் பிரதமர்களும் கடந்த மாதம் நியூயார்க்கில் சந்தித்த போது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இதுவிஷயத்தில் இன்னும் அரசியல் ரீதியான தெளிவான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த சம்பவங்களை நமது ராணுவத்தினர் எதிர்கொண்டு வருகின்றனர். நமது பாதுகாப்பு அமைச்சரும் இதுவிஷயமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சீரடைவதற்கான சாதகமான சூழல் உள்ளதா என்பதை என்னால் அறுதியிட்டுக் கூற இயலாது. எல்லையில் நிகழ்ந்த சம்பவங்கள், இரு நாடுகளிடையே உறவுகளை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

எல்லைப் பகுதியில் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதைத் தடுத்தால்தான் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் சீரடையும். இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும், மீண்டும் கூறி வருகிறார். இது வரவேற்கத்தக்கதே. எனினும், மீண்டும் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான தேதி, இடம் குறித்து என்னால் தற்போது அறுதியிட்டுக் கூற இயலாது.

சீனாவுடனான உறவுகள்: இந்தியா- சீனா இடையிலான உறவுகளைப் பொருத்தவரை, எல்லை பிரச்னை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதனால்தான், அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த வில்வித்தை வீரர்கள் இருவருக்கு சீனா வெள்ளைத் தாளில் விசா அளித்தது போன்ற சர்ச்சைக்கிடமான சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள், பிற துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் தொடர்ந்து அமைதி நிலவ வேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம். இதன்மூலம், எல்லை பிரச்னைக்கு இறுதியான தீர்வை நோக்கி இரு நாடுகளும் அடியெடுத்து வைக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது.

எல்லைப் பகுதியில் அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலான சில சம்பவங்கள் நடைபெறும் போது, அவற்றை எதிர்கொள்வதற்கான நடைமுறைகளை வகுத்து நாம் செயல்பட்டு வருகிறோம். அருணாசலபிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு விசா அளிக்கும் விவகாரத்தில் சீனா பின்பற்றும் நடைமுறைகள் குறித்து ராஜீய அளவில் தொடர்பு கொண்டு இந்தியா அவ்வப்போது தீர்வு கண்டு வருகிறது என்றார்.

TAGS: