நவீன ஆயுதங்களுடன் அமெரிக்க கப்பல் சுற்றிவளைப்பு

ship1இந்திய கடல் பகுதிக்குள் நவீன ஆயுதங்களுடன் நுழைந்த வெளிநாட்டுக் கப்பலை கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி பிரிவினர், சனிக்கிழமை அதிகாலை சுற்றி வளைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.

இந்திய கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி பிரிவுக்குச் சொந்தமான “நாயக்தேவி’ என்ற ரோந்துக் கப்பலில் வீரர்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 30 கடல்மைல் தொலைவு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, நவீன ஆயுதங்களுடன் வெளிநாட்டுக் கப்பல் செல்வதாக கடலோரக் காவல் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இந்திய கடல் பகுதியில் அனுமதியின்றி நுழைந்த அந்தக் கப்பலை காவல் படையினர் சுற்றிவளைத்தனர்.

விசாரணையில், “சீமேன் கார்டு’ (ள்ங்ஹ ம்ஹய் ஞ்ன்ஹழ்க்) என்ற பெயர் கொண்ட அந்தக் கப்பல் அமெரிக்காவில் உள்ள “அட்வன் போர்ட்’ என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானது என்பதும், கப்பலில் 10 மாலுமிகள், 25 படைவீரர்கள், 35 நவீன ரக துப்பாக்கிகள் இருப்பதும் தெரியவந்தது. கப்பல் மேற்கு ஆப்பிரிக்க பகுதியில் உள்ள “சியரலியோன்’ என்ற சிறிய நாட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்தக் கப்பல் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு 8-ஆவது தளத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி கடலோரக் காவல் படையினரும், கிழக்கு பிராந்திய கடற்படை உயர் அதிகாரிகளும் கப்பலுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்புக் கப்பல்? கடல் கொள்ளையரிடமிருந்து சரக்குக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இந்தக் கப்பல் ஈடுபட்டு வருவதாகவும், இதுதொடர்பாக கொச்சி துறைமுகத்தில் உள்ள கப்பல் உரிமையாளர்களிடம் விளக்கமளிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தக் கப்பல் வந்ததாகவும் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிளை நிறுவனங்களைக் கொண்ட இந்த நிறுவனம், சர்வதேச அனுமதியுடன் இந்தக் கப்பலை இயக்கிவருவதாகவும், கப்பல் உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டால் அதற்குரிய கட்டணம் பெற்றுக்கொண்டு, இந்தக் கப்பல் பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபடும் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் சென்றபோது போதுமான எரிபொருள், உணவு இல்லாததால் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய கப்பலில் இருந்தவர்கள் முடிவு செய்தனராம்.

இந்திய கடல் பகுதிக்குள் திடீரென அனுமதியின்றி நுழைந்ததால் சந்தேகத்தின்பேரில் அந்தக் கப்பலைச் சுற்றி வளைத்ததாக கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகவும், அவர்களுக்குத் தேவையான உணவு, எரிபொருள்களை யார் மூலம் வழங்குவது என்பது குறித்து ஆலோசிப்பதாகவும் கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

TAGS: