ஜாதி ரீதியாக அணி சேருவதை தடுக்க வேண்டும்: திருமாவளவன்

Thirumaஜாதி ரீதியாக அணி சேருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மறைமலை நகரில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் ஜாதி அடிப்படையில் வெளிப்படையாக அணி சேர்ந்திருப்பது ஜனநாயக சக்திகளுக்கு விடப்பட்டுள்ள சவாலாகும். வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயலும் இவர்களைத் தடுத்து நிறுத்துவது தமிழக அரசின் கடமையாகும்.

ஜாதியவாத சக்திகள் மீது தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. இதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். தலித்களுக்கு மட்டுமின்றி, நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளுக்கும், அமைதிக்கும், முன்னேற்றத்துக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்ற ஜாதிய சக்திகளை அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்கள் மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்கவும், ஒடுக்கப்பட்டோரின் மண்ணுரிமையைக் காப்பாற்றவும் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தை மண்ணுரிமை வாரமாக கடைப்பிடிக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது.

பிகார் அரசுக்கு கண்டனம்: பிகாரில் 58 தலித்களை சுட்டுக் கொன்ற ரண்வீர் சேனா அமைப்பினர் அனைவரும் நீதிமன்றம் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க பிகார் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்காடு இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது, மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

TAGS: