மத்திய பிரதேசத்தில் கோர சம்பவம் ; தசரா விழா நெரிசல்: 109 பக்தர்கள் பலி

mdபோபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் தசரா திருவிழாவுக்கு கூடிய பக்தர்கள் மத்தியில் நெரிசல் ஏற்பட்டதால் அதில் சிக்கி 109 பேர் பலியாயினர். 200 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்தியாவில் ஒடிசா, ஆந்திர மாநில புயலில் பெரும் உயிர்ச்சேதம் எதுவும் இல்லாமல் கரைகடந்தது என்ற நிம்மதியில் இருந்த நேரத்தில் இந்த எதிர்பாரா துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ம.பி., மாநிலத்தில் தாட்டியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கார் பகுதியில் துர்கை கோயில் உள்ளது. இங்கு தசரா விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இன்றைய விழாவில் சுமார் 5 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் திரண்டனர். இங்கு அம்மனை வழிபட கூட்டம் அலைமோதியது. சிந்து நதிக்கரையில் உள்ள இந்தக்கோயிலுக்கு பாலத்தின் மூலம் பலரும் நடந்து சென்றனர். இந்நிலையி்ல், பாலம் இடிந்து விழுந்ததாக வதந்தி பரவியது. இதையடுத்து உயிர்தப்புவதற்காக பக்தர்கள் அங்கும், இங்கும் ஓடினர். இதனால் ஏற்பட்ட நெரிசலை சமாளிக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதில் அச்சமுற்ற பக்தர்கள், ஒருவர் மீது ஒருவர் ஏறி சிதறி ஓடினர்.

இந்த நெரிசலில் பலர் மிதிபட்டு இறந்தனர். பலர் அருகில் உள்ள சிந்து நதியில் குதித்தனர். சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பும் , பதட்டமும் நிலவியது. இது வரை 109 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 200 க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

முதல்வர் இரங்கல்: மீட்பு படையினர் நெரிசலில் சிக்கி, காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கவலையும், இரங்கலும் தெரிவித்துள்ளார்.

நிவாரணம் அறிவிப்பு : விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ஒன்றரை லட்சமும் , காயமுற்றவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கபடுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

TAGS: