புதுடில்லி: லோக்சபா தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த லோக்சபா தேர்தலில், தன் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய, காங்கிரஸ் கட்சி எவ்வளவு பணத்தை செலவழித்தது என்ற விவரம் தெரிய வந்துள்ளது.
அதில், அக்கட்சியின் தலைவர் சோனியாவும், அவர் மகனும், துணைத் தலைவருமான, ராகுலும் தங்கள் சொந்தப் பணம், ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.
நாட்டின் பணக்கார கட்சிகளில் முதன்மையான கட்சியாக விளங்குகிறது காங்கிரஸ். நம்மை அடிமைபடுத்தியிருந்த, வெள்ளைக்காரர்களை விரட்ட, வெள்ளைக்காரர், ஆலன் ஆக்டோவியன் ஹியூம் என்பவரால், 1888ம் ஆண்டு துவக்கப்பட்ட அந்தக் கட்சிக்கு, நாட்டின் பல நகரங்களில், பிரமாண்ட கட்டடங்களும், வணிக வளாகங்களும் என, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.
அது போல், பல ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கமும் கொண்டுள்ளது அந்தக் கட்சி. அக்கட்சியின் தலைவராக இருக்கும், சோனியா, துணைத் தலைவராக இருக்கும், அவர் மகன், ராகுல் ஆகியோருக்கும், ஏராளமான சொத்துகள் உள்ளன.
முன்னாள் பிரதமர், இந்திரா குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு சொந்தமான கட்டடங்கள், சொத்துகள், ரொக்கம் ஏராளமாக இருந்த போதிலும், அவர்கள், கடந்த லோக்சபா தேர்தலில், தங்கள் சொந்தப் பணத்திலிருந்து, ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை.
காங்கிரஸ் பொருளாளர், மோதிலால் வோரா, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ள புள்ளிவிவரத்தில், இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் சார்பில், 2009 லோக்சபா தேர்தலில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து, மோதிலால் வோரா அனுப்பியுள்ள விவரத்தில், கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், 380 கோடி ரூபாயை, பலவிதங்களாக செலவிட்டுள்ளது.
லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும், கட்சி சார்பில், தேர்தல் நிதி வழங்கப்பட்டுள்ளது. அது, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. பெரிய மாநிலமான, உத்தர பிரதேசத்திற்கு, அதிகபட்சமாக, 25 லட்ச ரூபாய், அம்மாநிலத்தின் ஒவ்வொரு லோக்சபா தொகுதி, காங்கிரஸ் வேட்பாளருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ரே பரேலி லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், அமேதி தொகுதியில் போட்டியிட்ட, அவர் மகன் ராகுலுக்கும் தலா, 25 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையை மட்டுமே அவர்கள் பயன்படுத்தி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேறு ஒரு பைசா கூட, தங்கள் சொந்தப் பணத்தை அவர்கள் செலவழிக்கவில்லை. தேர்தல் செலவுகள் அதிகரித்துள்ளதால், இப்போது, உ.பி.,க்கு, 40 லட்ச ரூபாய், ஒரு தொகுதிக்கு ஒதுக்கப்படுகிறது.
ஜனாதிபதியாக இருக்கும், பிரணாப் முகர்ஜி, மேற்கு வங்கத்தின் ஜாங்கிபுர் லோக்சபா தொகுதியில் போட்டியிட, 15 லட்ச ரூபாய் பெற்றுள்ளார். அதற்கு மேல் அவர், தன் சொந்தப் பணத்தை செலவழித்தாரா என்பது குறித்து, தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
பிற வேட்பாளர்களுக்கு, சராசரியாக, பத்து லட்ச ரூபாயை, காங்கிரஸ் கட்சி, தேர்தல் நிதியாக வழங்கியுள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும், அதிகபட்சம், 25 லட்ச ரூபாய் மட்டுமே தேர்தல் செலவாக செலவழிக்க முடியும் என, தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குட்டி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, லோக்சபா காங்கிரஸ் வேட்பாளர்கள், ஐந்து லட்ச ரூபாய், கட்சியிடம் இருந்து, தேர்தல் நிதியாக பெற்றுள்ளனர். எனினும், ஆந்திராவை சேர்ந்த வேட்பாளர்கள், 4.5 லட்ச ரூபாய் தான் பெற்றுள்ளனர்.
இந்த வகையில், வேட்பாளர்களுக்கு, காங்கிரஸ் கட்சி, 36.91 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. 2009 லோக்சபா தேர்தலில், மொத்தம், 380.04 கோடி ரூபாயை அந்தக் கட்சி செலவழித்துள்ளது. நன்கொடையாக, 313.74 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
சோனியாவும், ராகுலும், கட்சி பணத்தை மட்டுமே செலவழித்து, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், மத்திய சட்ட அமைச்சர், கபில் சிபல், கட்சியிடமிருந்து, ஒரு பைசா கூட வாங்காமல், டில்லியின், சாந்தினி சவுக் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளார்.
அவரைப் போல், டில்லி முதல்வர், ஷீலா தீட்சித்தின் மகன், சந்தீப் தீட்சித், கிழக்கு டில்லி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். அவரும், ஒரு பைசா கூட, கட்சிப் பணத்தை பெறவில்லை.
தேர்தல் விளம்பரத்திற்காக, 207.88 கோடி ரூபாய் செலவழித்துள்ள காங்கிரஸ், 116.65 கோடி ரூபாயை, போக்குவரத்து செலவுக்காக செலவிட்டுள்ளது. போஸ்டர்கள் மற்றும் கட் அவுட்டுகளுக்காக, 21.33 கோடி ரூபாயை அந்தக் கட்சி செலவிட்டுள்ளது.