இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகள் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் தியாகு தனது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு திங்கள்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகள் மாநாட்டில் இந்தியா கலந்துக்கொள்ளக் கூடாது என்ற கோரிக்கையை திமுக தலைவர் கருணாநிதி சார்பில் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார்.
அப்போது கடந்த 12 நாள்களுக்கு மேல் இதே பிரச்சனைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகுவின் உடல்நிலைப் பற்றியும் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
அப்போது கருணாநிதிக்கு பிரதமர் அளித்த கடிதத்தில், “காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து தமிழ் மக்களுடைய உணர்வுகளை மதித்து நல்ல முடிவுகளை எடுப்போம்.
திமுக தலைவர் கருணாநிதி தலையிட்டு தியாகு அவர்களின் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.
தியாகுவிடம் ஒப்படைப்பு: உண்ணாவிரதத்தைக் கைவிடக் கோரி பிரதமர் அளித்த கடிதத்தை, அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தியாகுவிடம் திமுக அமைப்புச் செயலர் டி.கே.எஸ். இளங்கோவன் அளித்தார்.