இந்தியாவை வெறும் சந்தையாகக் கருதக்கூடாது என்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில், உலக அளவில் வளர்ந்து வரும் சந்தைகள் தொடர்பான கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுடன் குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, ஆமதாபாதில் இருந்து விடியோ கான்ஃபரன்ஸ் முறையில் பேசியதாவது:
இந்தியா போன்ற வளரும் நாடுகளை வெறும் சந்தைகளாகப் பார்ப்பது தவறாகும். அவை வெறும் சந்தைகள் மட்டும்தானா? அவை உருவாகி வரும் வளர்ச்சி மையங்களாகும். இந்த நாடுகளில் ஏராளமான மனித வளம் உள்ளது. எதைச் செய்தாலும் மக்கள் தாங்கிக் கொள்வார்கள் என்று இந்திய ஆட்சியாளர்கள் கருதக் கூடாது.
இந்தியாவில் மக்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை என்ற நிலைக்கு வந்துள்ளார்கள். ஜனநாயகத்தில் சில குறைபாடுகள் உள்ளன. ஆனால் இந்தியா போல் பல்வேறு இனம், மதம், மொழி போன்றவற்றைக் கொண்ட நாட்டுக்கு ஜனநாயகம்தான் சிறந்த ஆட்சி முறையாகும் என்றார் மோடி.