தூத்துக்குடி கடல் பகுதியில் பிடிபட்ட அமெரிக்க கப்பலின் பின்னணி குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனப் பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியது.
இது தொடர்பாக அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் (படம்) தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
தூத்துக்குடி கடல் பகுதியில் “எம்வி சீமேன் கார்டு ஓஹையோ’ என்ற கப்பலை இந்திய கடலோரக் காவல் படையினர் சிறைப்பிடித்துள்ளனர். அதில் ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளன. அக் கப்பலின் 10 மாலுமிகள், 25 ஆயுதம் ஏந்திய வீரர்களும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இச் சம்பவம் நடந்து மூன்று நாள்களாகியும் பயங்கர ஆயுதங்களுடன் பிடிபட்ட கப்பலின் நோக்கம், அதன் பின்னணி குறித்து மத்திய அரசு எந்த விவரத்தையும் வெளியிடாதது ஏன்?
இந்திய கடல் பகுதிக்கு அக் கப்பல் வருவதற்குப் போதுமான ஆவணங்கள் கிடையாது என அறிகிறோம். ஆனால், உரிய உரிமம் இல்லாமல் அக் கப்பல் கொச்சி துறைமுகத்தில் கடந்த வாரம் நின்று சென்ற விவரம் பதிவாகியுள்ளது. இதுபோன்ற கப்பல்கள் மீதும், அதன் ஊழியர்கள் மீதும் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
2011-இல் நடைபெற்ற மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவது மிகவும் முக்கியம் என்பதை நாடு உணர்ந்துள்ளது.
ஆனால், அதன் பிறகும் சட்ட விரோதமாக ஒரு வெளிநாட்டுக் கப்பல், கொச்சி துறைமுகம் வழியாக நாட்டின் பிற கடல் பகுதிக்குச் செல்ல முடிவது என்பது நமது பாதுகாப்பு வலுவாக இல்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சிறிய படகுகளுக்குத் தேவைப்படும் எரிபொருளை கேன்களில் கொண்டு செல்வது போல, அக் கப்பலுக்கு ஏராளமான கேன்களில் எரிபொருள் கொண்டு சென்றது எப்படி? அதற்கு யார் ஏற்பாடு செய்தார்கள்? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இந்த விவரங்களை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றார் நிர்மலா சீதாராமன்.