அமெரிக்க கப்பல் கேப்டனிடம் விசாரணை: ஆயுதங்கள் பறிமுதல்

shipதூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கப்பலில் இருந்த ஆயுதங்களை க்யூ பிரிவு போலீஸார் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். மேலும், நுண்ணறிவுப் பிரிவு (ஐ.பி.) அதிகாரிகளும் கப்பலுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்த, அமெரிக்காவை சேர்ந்த அட்வன்போர்டு என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சீமேன் கார்டு கப்பலை கடலோரக் காவல் படையினர் கடந்த 12-ஆம் தேதி சுற்றிவளைத்து தூத்துக்குடி வஉசி துறைமுத்துக்கு கொண்டுவந்தனர்.

மன்னார் வளைகுடா பகுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்தது, மீனவர்கள் சிலரிடம் திருட்டுத்தனமாக 1500 லிட்டர் டீசல் வாங்கியது என கடலோரப் பாதுகாப்புக் குழும (மரைன்) போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கப்பலில் 25 பாதுகாப்புப் படையினர், 10 மாலுமிகள் என 35 பேரும், 35 அதிநவீன துப்பாக்கிளும், 5765 தோட்டாக்களும் இருந்தன.

இதையடுத்து, துப்பாக்கிகள் இருந்த அறையை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரும், கடலோரக் காவல் படையினரும் சீல்வைத்தனர். கடல் கொள்ளையர்களிடம் இருந்து சரக்கு கப்பல்களைப் பாதுகாக்கும் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் என்றபோதிலும், இந்திய கடல் பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்ததால் உளவு பார்க்க வந்திருக்கலாம் என்ற சந்தேகமும் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தமிழக அரசின் க்யூ பிரிவு போலீஸýக்கு செவ்வாய்க்கிழமை இரவு மாற்றப்பட்டது. க்யூ பிரிவு கண்காணிப்பாளர் பவானீஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் கப்பலில் உள்ளவர்களிடம் புதன்கிழமை விசாரணையைத் தொடங்கினர்.

முதல்நாள் விசாரணையின் முடிவில் பலனளிக்கும் வகையில் எந்தவித தகவலும் கூடுதலாகக் கிடைக்கவில்லை என்ற கூறப்படுகிறது. முதல்கட்ட விசாரணை மேற்கொண்ட கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரிடம் இருந்து விசாரணை அறிக்கையை புதன்கிழமை இரவுதான் க்யூ பிரிவு எஸ்.பி. பவானீஸ்வரி கேட்டுப் பெற்றுள்ளார்.இதையடுத்து, இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் கப்பலுக்குச் சென்று பவானீஸ்வரி தலைமையிலான க்யூ பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

கப்பலில் உள்ள ஆயுதங்களுக்கான உரிமங்களின் நகல்கள் இருந்தபோதிலும் அதற்கான உண்மையான ஆவணங்களை கப்பல் நிறுவனத்தினர் வியாழக்கிழமை இரவு 7 மணி வரை ஒப்படைக்கவில்லை. இதனால், கப்பலில் உள்ள ஆயுதங்களை க்யூ பிரிவு போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த ஆயுதங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்; அமெரிக்க நிறுவனம் ஆயுதங்களுக்கான உரிய ஆவணங்களைக் காட்டிய பிறகு நீதிமன்றம் மூலம் உரிய அபராதத் தொகையை செலுத்திய பிறகு ஆயுதங்களை அவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என, க்யூ பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

மத்திய உளவுத் துறை: இதற்கிடையே, மத்திய அரசின் உளவுத் துறையின் நுண்ணறிவுப் பிரிவில் (ஐபி) உள்ள ராமநாதபுரம் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் வியாழக்கிழமை தூத்துக்குடி வந்தனர். தங்களது வருகை குறித்து ரகசியமாக வைத்திருந்த அவர்கள் அமெரிக்க ஆயுதக் கப்பலுக்கு வியாழக்கிழமை பிற்பகலில் சென்றனர்.

பின்னர், கப்பலின் கேப்டன் மற்றும் படை வீரர்களிடம் மன்னார் வளைகுடா பகுதிக்குள் வந்ததன் நோக்கம் குறித்தும், கப்பலில் உள்ள ஆயுதங்கள் குறித்தும், கொச்சி துறைமுகத்தில் ஆயுதங்கள் இல்லை என சான்றளிக்கப்பட்ட நிலையில் இடைப்பட்டக் காலத்தில் கப்பலுக்குள் ஆயுதங்கள் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் கேள்விகளைக் கேட்டு விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், கப்பலில் 25 பாதுகாப்பு வீரர்கள் மட்டும் உள்ள நிலையில், 35 துப்பாக்கிகள் இருப்பது ஏன்? கப்பலில் வேறு யாரேனும் வந்தார்களா என்பது குறித்தும் அவர்கள் விசாரணை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

TAGS: