காமன்வெல்த் மாநாடு: இந்தியா புறக்கணிக்க வேண்டும்

jaya2இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எவரும் பங்கேற்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

இலங்கையில் தமிழ்ச் சமுதாயத்தினருக்கு உரிய உரிமைகள் மீண்டும் கிடைத்திட தூதரக ரீதியில் வலிமையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக தங்களுக்கு கடந்த மார்ச் 25 ஆம் தேதியன்று கடிதம் எழுதிருந்தேன். மேலும், கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கவும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியிருந்தேன்.

இனப் படுகொலை நடத்திய இலங்கை: இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அந்த நாட்டு அரசு இனப் படுகொலை நடத்தியதுடன் போர் குற்றங்களிலும் ஈடுபட்டது. இப்போதும் மனித உரிமை மீறல்கள் பெருமளவு நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்னைகள் தொடர்பாக பல கடிதங்களை எழுதியுள்ளேன். ஆனால், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சமமான உரிமைகள் கிடைப்பதிலும், ஜனநாயக விடுதலை அளிக்கவும் அந்த நாட்டு அரசு மறுப்புத் தெரிவித்து வருகிறது. இது, காமன்வெல் அமைப்பின் மையக் கருவுக்கு முற்றிலும் எதிரானது.

இந்தச் சூழ்நிலைகளில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் இலங்கைத் தமிழர்களின் விஷயத்தில் அந்த நாட்டு அரசின் செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் அளிப்பது போன்று அமைந்து விடும்.

மேலும் மாநாட்டில் பங்கேற்பது இலங்கை அரசின் செயல்பாடுகளை ஊக்கம் கொள்ளச் செய்வதுடன், இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழகத்திலுள்ள தமிழர்களின் உணர்வுகள் மற்றும் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் போய் விடும்.

காமன்வெல்த் மாநாட்டில் தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் இந்தியா பங்கேற்றால், அது தமிழகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். இலங்கைப் பிரச்னை தொடர்பாக அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் பட்சத்தில் அந்தப் போராட்டங்கள் மேலும் தீவிரம் பெறும்.

கனடா புறக்கணித்துள்ளது: காமன்வெல்த் கொள்கைகளை பின்பற்றத் தவறியதால் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கனடா பங்கேற்காது என்று அந்த நாட்டின் பிரதமர் ஏற்கெனவே தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

எனவே, இலங்கையில் உள்ள தமிழ்ச் சமுதாயத்துக்கு எதிராக மனித உரிமை மீறல்களையும், இனப் பாகுபாட்டையும் அந்த நாட்டு அரசு காட்டி வரும் சூழ்நிலையில் அங்கு நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். இந்த நடவடிக்கை இலங்கைத் தமிழர் பிரச்னையில் அந்த நாட்டு அரசுக்கு தூதரக ரீதியில் ஒரு நெருக்குதலை ஏற்படுத்த உதவும்.

மேலும் இது ஜனநாயக பண்புகளை பின்பற்றும் நாடாகவும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது என்பதை உணர்த்துவதாக இருக்கும். தமிழகத்திலுள்ள தமிழர்கள் உள்பட அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதாக அமையும்.

எந்த நிலையிலும் பங்கேற்கக் கூடாது: தமிழக மக்களின் உணர்வுகள் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, காமன்வெல்த் மாநாட்டில் தாங்கள் தனிப்பட்ட முறையில் பங்கேற்பது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாவதை நான் அறிகிறேன். காமன்வெல்த் மாநாட்டில் அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ எந்த நிலையிலும் யாரும் பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இலங்கையில் உள்ள தமிழ்ச் சமுதாயத்தினருக்கு எதிராக நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை இந்தியா சகித்துக் கொள்ளாது என்பதை தெரிவிக்க இதுபோன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகளே சரியானதாக இருக்கும்.

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் முடிவை இந்தியா எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

TAGS: