தில்லி மட்டுமே இந்தியா அல்ல: நரேந்திர மோடி பேச்சு

modi_choதில்லி மட்டுமே இந்தியா அல்ல என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.

வெளிநாடுகளுடன் ஒவ்வொரு மாநிலத்தின் பொருளாதார, கலாசார உறவை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்த அவர் இவ்வாறு கூறினார்.

“நானி பல்கிவாலா’ நினைவுச் சொற்பொழிவு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பத்திரிகையாளர் அருண் சௌரி எழுதிய “சுய ஏமாற்று – இந்திய – சீனக் கொள்கைகள்’ என்ற புத்தகத்தை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வெளியிட, “துக்ளக்’ ஆசிரியர் சோ பெற்றுக் கொண்டார்.

பின்னர் “இந்தியாவும் உலகமும்’ என்ற தலைப்பில் நரேந்திர மோடி ஆற்றிய உரை:-

இந்தியா மிகப்பெரிய நாடாகும். இந்தியாவினுடைய ஒருங்கிணைந்த சக்தியை வெளிநாட்டுக்குக் காட்ட வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அப்படிக் காட்ட வேண்டுமானால் தில்லி மட்டுமே இந்தியா என்ற நிலை மாற வேண்டும்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை தில்லியில் உள்ள அரசியல்வாதிகள் தீர்மானிக்கக் கூடாது. மாநிலங்களில் உள்ள மக்களும் தீர்மானிக்க வேண்டும்.

நம் முன்னோர் இந்தியாவினுடைய கலாசாரம், பண்பாடு, பொருளாதார நிலை போன்றவை மூலம் உலக நாடுகளோடு நல்லுறவு வைத்திருந்தனர். அதேபோன்று, மீண்டும் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் வெளிநாடுகளோடு நல்லுறவை மேம்படுத்த வழிவகை காண வேண்டும்.

இந்தியாவில் 30-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இருக்கின்றன. ஒரு மாநிலம் ஒரு குறிப்பிட்ட நாட்டோடு பொருளாதார மற்றும் கலாசார உறவை மேம்படுத்தினால், உலக அரங்கில் நம் நாடு குறைந்தபட்சம் 30 நாடுகளுடனாவது வலுவான உறவை உருவாக்கி விடும். 30 நாடுகள் இந்தியாவின் பக்கம் இருந்தால் நாம் யாருக்கும் பயப்படத் தேவையில்லை.

பயங்கரவாதத்தால் இந்தியாவைப் போன்று உலக அளவில் பாதிக்கப்பட்ட நாடு வேறு எதுவும் இருக்க முடியாது. பயங்கரவாதத்தை முற்றிலும் வேரறுக்க வேண்டும். பயங்கரவாதத்தை முற்றிலும் களைந்து காட்டியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்.

அவர் ஆட்சி காலத்தில் உலக நாடுகளை இரண்டாகப் பிரித்தார். பயங்கரவாத நாடுகள், பயங்கரவாதத்துக்கு எதிரான நாடுகள் எனப் பிரித்து, பயங்கரவாத நாடுகளை தனிமைப்படுத்தினார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அணு ஆயுத சோதனை நடத்தினார். அப்போது இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி இரண்டாம் முறையும் அணு ஆயத சோதனை நடத்தப்பட்டது. அப்போதுதான் இந்தியாவின் வல்லமையை உலக நாடுகள் அறிந்து கொள்ள முடிந்தது.

இனி வருங்காலத்தில் நாடுகளுக்கு இடையே ஆயுதப் போர் என்பதெல்லாம் இல்லை.

மறைமுக யுத்தங்கள் நடைபெறும். அந்த யுத்தத்தை வெல்வதற்கு மனித சுவர்களாக எழுந்து நின்றால் மட்டும் போதாது. ஒருங்கிணைந்த உள்ளங்களாக எழுந்து நின்றால்தான் வெல்ல முடியும்.

சுற்றுலா மூலம் ஒருங்கிணைக்க வேண்டும்: பயங்கரவாதம் கொண்ட நாடுகளை தனிமைப்படுத்தும், அதே நேரம், சுற்றுலா மூலம் நாடுகளை ஒருங்கிணைக்கும்

முயற்சியிலும் ஈடுபட வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். உலக நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதன் சுகாதார வசதிகளைத் தேடி வருகின்றனர். மருத்துவ சுற்றுலாவை நாம் நிச்சயம் மேம்படுத்த வேண்டும். சுற்றுலா மூலம் 3 பில்லியன் டாலர் உலக அளவில் வருமானம் ஈட்டப்படுகிறது. இந்தியாவில் சுற்றுலா என்பதே இருப்பதாகத் தெரியவில்லை.

சிதம்பரம் மீது தாக்கு: இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலை அவசரச் சிகிச்சை பிரிவில் உள்ளது. இதை மாற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்து அந்த ஒருவரை (ப.சிதம்பரம்) ஏன் தான் அனுப்பினீர்களோ? தெரியவில்லை.

இந்தியர்களின் நலன்: இலங்கைத் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்களின் நலன்களைப் பேணுவது இந்தியாவின் பொறுப்பாகும். அவ்வப் போது கைதாகும் தமிழக மீனவர்களின் நலன்களைக் கூட பாதுகாக்க முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது.

சோலார் திட்டம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினேன்.

ஆனால் பதில் இல்லை. சோலார் திட்டங்ளை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும்.

21-ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாகவும், இந்தியாவின் நூற்றாண்டாகவும் நிச்சயம் இருக்கும் என்றார் மோடி.

பல்கிவாலா அறக்கட்டளையின் அறங்காவலர் அரவிந்த் பி.தத்தார் வரவேற்றார். மற்றொரு அறங்காவலர் என்.எல்.ராஜா நன்றி கூறினார்.

TAGS: