உ.பி.யில் 1,000 டன் தங்கப் புதையல்?

templegoldஉத்தரப்பிரதேசத்தில் 1,000 டன் தங்கப்புதையல் இருப்பதாகக் கூறப்படும் கோட்டையில் அகழாய்வுப் பணிகளை இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ஏ.எஸ்.ஐ.) தொடங்கியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த துறவியான ஷோபன் சர்க்கார் என்பவர் தனது கனவில் அங்குள்ள உன்னாவ் பகுதியில் உள்ள பழங்காலக் கோட்டையில் 1,000 டன் தங்கம் புதைந்திருக்கும் தகவல் தெரிய வந்ததாகத் தெரிவித்தார்.

“எனது கனவில், பிரிட்டிஷாரிடம் போரிட்டு வீரமரணமடைந்த ராஜா ராவ் ராம்பக்ஷ் சிங் என்ற மன்னர் தோன்றினார். உன்னாவில் உள்ள கோட்டையில் 1,000 டன் தங்கத்தைப் புதைத்து வைத்திருப்பதாகவும் அதைக் கவனித்துக் கொள்ளுமாறும் கூறினார்’ என்று ஷோபன் சர்க்கார் குறிப்பிட்டார். தனது கனவு குறித்து அவர் மத்திய அமைச்சர் சரண்தாஸ் மஹந்த்திடம் எடுத்துக் கூறினார். ராஜா ராவ் ராம்பக்ஷ் சிங்கின் கோட்டையில் அகழாய்வு செய்ய வைக்க அவரை சம்மதிக்க வைத்தார். மத்திய வேளாண்துறை இணை அமைச்சராக இருக்கும் மஹந்த் கடந்த மாதம் ஷோபன் சர்க்காரின் ஆசிரமத்துக்கு வந்து இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து, உன்னாவ் மாவட்டத்தின் தௌடியாகாலா கிராமத்தில் உள்ள கோட்டையில் பலத்த பாதுகாப்புக்கு இடையில் அகழாய்வுப் பணிரயை இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.மிஸ்ரா தலைமையில் 12 உறுப்பினர் குழு இப்பணியில் ஈடுபட்டுள்ளது. அகழ்வுப் பணியை உன்னாவ் மாவட்ட ஆட்சியர் விஜய் கிரண் ஆனந்த் முறைப்படி தொடங்கி வைத்தார்.

முன்னதாக, அங்கு வெள்ளிக்கிழமை காலை பூமி பூஜையை நடத்திய துறவி ஷோபன் சர்க்கார், அகழாய்வு மேற்கொள்ள வேண்டிய இடங்களைக் குறியிட்டுக் காட்டினார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “”1000 டன் தங்கப் புதையலானது குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டுமே குவித்து வைக்கப்பட்டிருக்காது. எனவே வெவ்வேறு இடங்களில் அகழாய்வு நடத்த வேண்டியுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.மிஸ்ராவிடம், “”துறவியின் கனவை அடிப்படையாகக் கொண்டே இந்த அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டதா?” என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு, “”இந்திய நிலப் பண்பியல் ஆய்வு அமைப்பு (ஜி.எஸ்.ஐ.) அந்தப் பகுதியில் மண் பானைகள் போன்றவற்றைக் கண்டெடுத்தது. அங்கு தங்கம் அல்லது வெள்ளி புதைந்திருக்கலாம் என்றும் அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையிலேயே அங்கு அகழாய்வு செய்ய முடிவெடுத்தோம். அகழாய்வுப் பணி முடிவடைய ஒரு மாதம் ஆகும்” என்று அவர் பதிலளித்தார்.

கனவு நனவாக வேண்டும்!

“”உன்னாவ் கோட்டையில் தங்கம் கண்டெடுக்கப்பட்டால் அது யாருக்குச் சொந்தமாகும்?” என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவிடம் கான்பூரில் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் “”அது மத்திய அரசுக்குச் சொந்தமா? மாநில அரசுக்குச் சொந்தமா? என்று எனக்குத் தெரியாது. துறவியின் கனவு நனவாக வேண்டும் என்று விரும்புகிறேன். மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலுமே ஒரு தங்கச் சுரங்கம் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்” என்றார்.

TAGS: