காங்கிரஸ் எம்.பி. மசூத் பதவி பறிப்பு

mpஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூதின் பதவி திங்கள்கிழமை பறிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கையை மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி மேற்கொண்டார்.

குற்றவியல் வழக்கில் இரண்டு ஆண்டு அல்லது அதற்கு அதிகமான காலத்துக்குத் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் அந்தப் பதவியை வகிக்கத் தகுதியில்லை என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 10ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. அந்தத் தீர்ப்பின்படி அதிகாரப்பூர்வமாக எம்.பி. தகுதியை இழக்கும் முதல் நபர் ரஷீத் மசூத் ஆவார்.

ஊழல் வழக்கில் மத்திய சுகாதாரத் துறை முன்னாள் இணை அமைச்சரும், காங்கிரஸ் பிரமுகருமான ரஷீத் மசூதுக்கு (67) நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி சி.பி.ஐ. நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8(3)-ஆவது பிரிவின்கீழ், அவர் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, “ரஷீத் மசூதின் தகுதிநீக்கத்தால் மாநிலங்களவையில் ஓரிடம் காலியாகி உள்ளதற்கான அறிவிக்கையை மாநிலங்களவை செயலாளர் ஷம்ஷேர் கே.ஷெரீப் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிக்கையின் நகல், மேல் நடவடிக்கைக்காக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்று தில்லியில் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 1990இல் அப்போதைய பிரதமராக இருந்த வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசில் ரஷீத் மசூத் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்தார். அப்போது, திரிபுரா மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 1990-91ஆம் கல்வியாண்டில், தகுதி இல்லாதவர்களுக்கு முறைகேடாக மத்திய அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் ஒதுக்கியதாக ரஷீத் மசூத், திரிபுரா மாநில சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த காசி ராம், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி குர்தியால் சிங், முன்னாள் சுகாதாரத் துறை செயலர் அமல்குமார் ராய், 1990இல் திரிபுரா முதல்வராக இருந்த சுதிர் ரஞ்சன் மஜும்தார் மற்றும் மாணவர்கள் 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

தில்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ரஷீத் மசூத், குர்தியால் சிங், அமல் குமார் ராய் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், முறைகேடாக மாணவர் சேர்க்கை பெற்ற ஒன்பது மாணவர்களுக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமாஜவாதி கட்சியில் இருந்த ரஷீத் மசூத், கடந்த 2011ஆம் ஆண்டில் காங்கிரஸில் சேர்ந்தார்.

லாலு, சர்மா நிலை என்ன?: ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள மக்களவை உறுப்பினர்களான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் சர்மா ஆகியோர் இன்னமும் தகுதிநீக்கம் செய்யப்படவில்லை. இவர்கள் இருவரையும் உடனே தகுதி நீக்கம் செய்யலாம் என மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கூலம் இ.வாகனவதி அண்மையில் யோசனை தெரிவித்திருந்தார்.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், ஜெகதீஷ் சர்மா உள்பட 45 பேர் குற்றவாளிகள் என்று கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தில்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதைத் தொடர்ந்து கடந்த 3ஆம் தேதி, லாலு பிரசாதுக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ஜெகதீஷ் சர்மாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் அளித்த யோசனையைத் தொடர்ந்து இவர்களது நிலை என்ன என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

குற்றப் பின்னணி உள்ள மக்கள் பிரதிநிதிகளைப் பாதுகாக்கும் வகையிலான அவசரச் சட்டம் கொண்டு வரும் முயற்சியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஈடுபட்டது.

அதற்கு முக்கிய எதிர்கட்சியான பாஜக உள்பட பல கட்சிகளில் இருந்தும் கடும் விமர்சனம் எழுந்தது. மத்திய அமைச்சரவையால் அனுமதி அளிக்கப்பட்ட அந்தச் சட்டத்தை முட்டாள்தனமானது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார். இந்த சர்ச்சைக்கு மத்தியில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்த அவசரச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது நினைவுகூரத்தக்கது.

TAGS: