கழிவறை தண்ணீரில் ஜூஸ்: அதிர்ச்சி தகவல்

toiletwater_juice_001திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் பொதுக்கழிப்பிடங்களில் உள்ள தண்ணீரால் கரும்பு ஜூஸ் தயாரித்து கடைகளில் விற்றுவரும் செயல் அம்பலமாகியுள்ளது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். சேலம் பேருந்துகள் நிற்கும் “ஷெட்’ அருகேயும், கிழக்கு பகுதியில் உள்ள வணிக வளாகத்திலும், பழரச கடைகள் செயல்படுகின்றன.

கரும்பு ஜூஸ் என்ற பெயரில் சிலர் சுகாதாரமற்ற குளிர்பானங்களை தயாரித்து விற்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றதை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தங்கவேல், முருகேசன் ஆகியோர், பழரச கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

சுகாதாரமற்ற முறையில் பழரசம் விற்பனை செய்தவர்களை கண்டறிந்து, மேல்நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கரும்பு ஜூஸ் என்ற பெயரில் சுகாதாரமற்ற, உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் வகையிலான குளிர்பானங்கள் விற்பதாக புகார் வந்தது. ரகசியமாக ஆய்வு செய்தபோது, அதிர்ச்சியான விடயங்கள் தெரியவந்தது.

குறிப்பாக சேலம் பேருந்துகள் நிற்கும் “ஷெட்’ அருகே உள்ள ஜூஸ் கடைகளில் கழிவறைகளில் உள்ள தண்ணீரை எடுத்து வந்து கரும்பையே பயன்படுத்தாமல், சேக்ரின் மற்றும் கலர் பவுடர்களை பயன்படுத்தி குளிர்பானம் தயாரிப்பதை நேரிடையாக கண்டுபிடித்தோம்.

மேலும் சில கடைகளில் மீன் பதப்படுத்த பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகளை வைத்து, குளிர்பானம் தயாரிப்பதும் தெரியவந்தது. குறிப்பாக, மறைவாக வைத்துள்ள பெட்டிகளில் இருக்கும் அழுகி கெட்டுப்போன பழ வகைகள் மூலமாக ஜூஸ் தயாரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

தரமற்ற அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்து, உடனடியாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தரமில்லாத உணவு பொருட்களை விற்பனை செய்தகுற்றத்திற்காக, விற்பனையாளர்கள் ஐந்து பேருக்கும் நோட்டீஸ் கொடுக்க உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி மேல்நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

பொதுமக்கள் பழங்கள், பழரசங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கும்போது தரமாக தயாரிக்கப்படுவதை உறுதி செய்து கொண்டு பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளனர்.

TAGS: