எனது பாட்டி, அப்பாவை போல நானும் கொல்லப்படலாம்: ராகுல் காந்தி

rahul-gandhiநாட்டிற்காக உயிர்நீத்த எனது பாட்டி, தந்தை ஆகியோரைப் போல நானும் கொல்லப்படலாம். அதற்காக நான் கவலைப்படவில்லை என்று, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி உருக்கமாகப் பேசினார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு என்ற இடத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

நாட்டில் வகுப்புவாதத்தைப் பரப்பி பல உயிரிழப்புகளுக்கு பாஜக காரணமாகி வருகிறது. அண்மையில் முஸாபர்நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் சென்றிருந்தேன். அங்கு சோகமான முகங்களைக் கண்டேன். எனவே தான் அவர்களை (பாஜக-வை) நான் எதிர்க்கிறேன்.

அவர்கள் முஸாபர்நகரில் வகுப்புவாதத் தீயைப் பற்றவைத்தனர்; குஜராத்திலும், உ.பி.யிலும், காஷ்மீரிலும் அதையேதான் செய்தனர். அதனால் நாடு சீரழிகிறது. வகுப்புவாத அரசியலால் ஏற்பட்ட அதிருப்தியும் கோபமும் கலவரமாகி பலரது உயிரைப் பறிக்கின்றன.

எனது பாட்டி இந்திரா காந்தி கொல்லப்பட்டார். எனது தந்தை ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். நானும் ஒருநாள் கொல்லப்படலாம். அதற்காக நான் கவலைப்படவில்லை. இதை எனது இதயத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறேன்.

அனைவருக்கும் கோபம் வரும். அந்தக் கோபம் மக்களைத் தான் பாதிக்கும். கோபத்தை வளர்ப்பதை சில கட்சிகள் விரும்பியே செய்கின்றன. அரசியல் லாபத்திற்காக அவர்கள் மக்களை பாதிக்கச் செய்கின்றனர். அதனால் தான் பாஜக-வின் அரசியலை நான் எதிர்க்கிறேன். எனது பாட்டியைக் கொன்றவர்கள் மீது எனக்கும் கோபம் இருந்தது. பஞ்சாப் மக்களுக்கும் அந்தச் சமயத்தில் பெரும் கோபம் இருந்தது. ஆனால் காலப்போக்கில் கோபம் கரைந்துவிட்டது.

சில மாதங்களுக்கு முன் பஞ்சாபைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் என்னைச் சந்திக்க வந்தார். அவர் என்னை 20 ஆண்டுகளுக்கு முன் சந்தித்திருப்பதாகக் கூறினார். அப்போது என்னைக் கொல்ல விரும்பியதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் இப்போது கோபம் மாறி அன்புடன் என்னை அணைத்துக் கொண்டார்.

கோபம் குறைய பல மாதங்களாகலாம். ஆனால் கோபத்தைப் பற்றவைக்க சில நிமிடங்கள் தான் ஆகும். கோபத்தை மாற்றி சகோதரத்துவத்தை வலுப்படுத்த நீண்ட காலமாகும். வகுப்புக் கலவரங்களால் ஏற்படும் சமூகப் பிளவை சரிப்படுத்த பல ஆண்டுகளாகும்.

எனது தந்தை தொலைபேசித் துறையில் நிலவிய கோட்டா முறையை மாற்றச் செய்த சீர்திருத்தத்தால் இன்று அனைவர் கையிலும் மொபைல் போன் தவழ்கிறது. அதேபோல, அரசியலிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறேன். அனைத்து அரசியல் கட்சிகளும் நூற்றுக்கணக்கான தலைவர்களால் மட்டுமே வழிநடத்தப்படுகின்றன. இந்நிலையை மாற்றி, லட்சக்கணக்கான இளைஞர்களின் பொறுப்பில் அரசியல் வருவதற்கு முயற்சி செய்வேன்.

இந்தத் தேர்தல் பிரசாரத்துடன் எனது போர் ஓயாது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நான் இங்கு வரவில்லை. உங்கள் எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திக்குமாறு கூறவே இங்கு வந்தேன் என்றார் ராகுல்.

TAGS: