காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்

jaya2இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தாற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கொண்டு வந்தார். இந்தத் தீர்மானம் உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மான விவரம்:

தமிழக மக்களின் ஒருமித்த கருத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பெயரளவுக்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது. இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தாற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசை தமிழக சட்டப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்மானத்தை முன்மொழிவதற்கு முன்பாக முதல்வர் ஜெயலலிதா பேசியது:

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக மக்கள் வலியுறுத்தி வரும் சூழ்நிலையில், பிரதமர் தன்னுடைய பங்கேற்பு பற்றி மட்டும் கருத்து தெரிவித்துள்ளது தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. காமன்வெல்த் நாடுகளின் தலைவரான இரண்டாம் ராணி எலிசபெத் கையெழுத்திட்ட காமன்வெல்த் சாசனத்தில், மனித உரிமைகள் என்ற தலைப்பின் கீழ் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், மனித உரிமைகள் குறித்த பொதுவான பிரகடனம், இதர தொடர்புடைய மனித உரிமைகள் குறித்த உடன்பாடுகள் மற்றும் இதர சர்வதேச ஆவணங்கள் ஆகியவற்றை பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். பாலினம், இனம், நிறம், மதம், அரசியல் நம்பிக்கை அல்லது வேறு காரணங்களுக்காக ஏற்படுத்தப்படும் வேறுபாடுகளை கடுமையாக எதிர்க்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

முரணாகச் செயல்படும் இலங்கை: காமன்வெல்த் சாசனத்தின் இந்த கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முற்றிலும் முரணாக இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. காமன்வெல்த் நாடுகளின் முக்கியமான கொள்கைகள், கோட்பாடுகளை நிலைநிறுத்த முன்வராத இலங்கை நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கனடா நாட்டு பிரதமர் அறிக்கை விடுத்துள்ளார்.

அவருக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் மிகக் குறைவாக வசிக்கும் கனடா நாடே இதுபோன்றதொரு முடிவை எடுத்து பெயரளவில் ஒருவரை அனுப்பவுள்ள சூழ்நிலையில், எட்டு கோடி தமிழர்கள் வசிக்கும் இந்தியா, இந்த மாநாட்டில் பெயரளவிலும் கலந்துகொள்ளாது என்னும் தீர்க்கமான முடிவை இன்னும் எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையிலும், தமிழக மக்களின் உணர்வுகளைத் தெரிவிக்கும் வகையிலும், தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்று பேசினார்.

இந்தத் தீர்மானத்தை பண்ருட்டி ராமச்சந்திரன் (எதிர்க்கட்சி துணைத் தலைவர்), மு.க.ஸ்டாலின் (திமுக), சௌந்தரராஜன் (மார்க்சிஸ்ட்), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), கோபிநாத் (காங்கிரஸ்), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி), கதிரவன், தனியரசு, செ.கு.தமிழரசன் ஆகியோர் வரவேற்றுப் பேசினர். பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

TAGS: