ராகுல் காந்திக்கு எதிராக வலுப்பெறும் குற்றச்சாட்டுக்கள்

rahul_gandhiபாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.யுடன் முசாஃபர்நகர் முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பு வைத்துள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கு பாஜக, சமாஜவாதி, இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

“கலவரத்தால் பாதிக்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் உள்ள முஸ்லிம் இளைஞர்களுடன் ஐ.எஸ்.ஐ. தொடர்பு வைத்துள்ளது என்று இந்திய உளவுப் பிரிவினர் எனக்கு தகவல் தெரிவித்துள்ளனர்’ என்று இந்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

இதற்கு ஜான்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தார். அவர் மேலும் பேசியது: உத்தரப் பிரதேச மாநில முஸ்லிம் இளைஞர்களுக்கு ஐ.எஸ்.ஐ.வுடன் தொடர்பு உள்ளதாக ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டு சுமத்தி அந்த சமுதாயத்தையே அவமானப் படுத்தியுள்ளார்.

ரகசியக் காப்பு பிரமாணம் எடுத்துக் கொள்ளாத ராகுல் காந்தியிடம் எந்த அடிப்படையில் இந்திய உளவுப்பரிவினர் இது போன்ற தகவல்களைத் தெரிவிக்கின்றனர்?

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் பாகிஸ்தான் உளவுப்பரிவினர் சுதந்திரமாக தகவல்களைப் பரப்பி வருகிறார்கள் என்றால் காங்கிரஸ் அரசு என்ன செய்கிறது?

ராகுல் காந்தி குற்றம்சாட்டும் இளைஞர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நரேந்திர மோடி கூறினார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவ்டேகர், “எம்.பி. மற்றும் கட்சியின் நிர்வாக உறுப்பினர் பதவி வகித்து வரும் ராகுல் காந்தியிடம் உளவுத்துறை எப்படி இது போன்ற தகவல்களை வழங்கி வருகிறது? இதே பொறுப்பில் உள்ள பாஜக கட்சி உறுப்பினர்களிடம் இது போன்ற தகவல்களை ஏன் உளவுத்துறை பகிர்ந்து கொள்வதில்லை? இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே விளக்கமளிக்க வேண்டும்’ என்று கூறினார்.

பொறுப்பற்ற பேச்சு: ராகுலின் பொறுப்பற்ற பேச்சு காரணமாக முஸ்லிம் இளைஞர்களின் நேர்மையில் சந்தேகம் ஏற்படும் என்று சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் அஸம் கான் கூறினார். முசாஃபர்நகர் கலவரத்துக்கு பாஜகதான் காரணம் என்று ஒரு நாள் குற்றம்சாட்டுகிறார். மறுநாள் முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம்சாட்டுகிறார்.

அவரது பொறுப்பற்ற பேச்சுக்கு முஸ்லிம் இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் கேட்கவில்லை என்றால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இது போன்ற பேச்சு ராகுலின் முதிர்ச்சியின்மையை காண்பிக்கிறது என்றார் அஸம் கான். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு சமாஜவாதி கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் சமுதாயத்தினரை தீவிரவாதிகளுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அதுல் அஞ்சன் கூறினார். இதன் மூலம் முஸ்லிம்கள் மீது ராகுல் வெறுப்பை ஏற்படுத்துகிறார். ராகுல் காந்தியின் பிரசார அறிக்கைகளை யார் தயாரிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதன் மூலம் மீண்டும் பதற்றத்தை அவர் தூண்டுகிறார் என்றார் அதுல் அஞ்சன்.

தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்

தேர்தல் பிரசாரத்தின்போது வகுப்புவாதத்தை தூண்டும் வகையிலும், ஆதாரம் இல்லாமலும் பாஜக மீது குற்றம்சாட்டி வரும் ராகுலிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று பாஜக, தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெள்ளிக்கிழமை அளித்துள்ள மனுவில், முசாஃபர்நகர் கலவரம் தொடர்பாக விசாரணை முடியாத நிலையில் கலவரத்துக்கு பாஜகதான் காரணம் என்று ஆதாரம் இல்லாம் ராகுல் குற்றம்சாட்டுகிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் பிரச்னைக்கும் பாஜகதான் பொறுப்பு என்கிறார். ஆனால் அங்கு பாஜக முழுமையாக செயல்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

TAGS: