தமிழக மீனவர்களை கைது செய்வதற்கு இலங்கை தமிழ் மீனவர்களே காரணம்: மத்திய மந்திரி நாராயணசாமி குற்றச்சாட்டு

narayanasamyகாரைக்கால், அக்.27– காரைக்காலில் மத்திய மந்திரி நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–

காரைக்கால் பகுதியை சேர்ந்த சுமார் 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். அவர்களது 4 படகுகளையும் இலங்கை அரசு கையகப்படுத்தி உள்ளது. காரைக்கால் மீனவர்கள் அங்குள்ள திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதும் திருமுருகன் எம்.எல்.ஏ என்னிடம் உடனடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார். அதனை தொடர்ந்து இலங்கையில் உள்ள நமது தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி, நமது மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது.

மேலும், ஏற்கனவே இலங்கை அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ள படகுகளுடன், தற்பொழுது கையகப்படுத்தப்பட்டுள்ள நான்கு படகுகளையும் இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை நேரடியாக சந்தித்து பேசியுள்ளேன். அவரும் இதுதொடர்பாக இலங்கை அரசுடன் பேசி வருகிறார். நமது இந்தியப் பிரதமரை சந்திக்க, இலங்கை ஜனாதிபதியின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் இந்தியா வருகிறார். அவரையும் சந்தித்து பேசி படகுகளை திரும்ப பெற நடவடிக்கை எடுப்போம்.

மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் கலந்து பேசி இந்திய மீனவர்கள் எந்த எல்லை வரை மீன்பிடிப்பது? எந்தக் காலங்களில் மீன்பிடிப்பது என்றும், அதுபோன்று இலங்கை மீனவர்கள் எந்த எல்லை வரை மீன்பிடிப்பது? எந்தக் காலங்களில் மீன்பிடிப்பது என்றும் முடிவு செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான வேலைகளை செய்து வருகிறோம்.

இதற்கு தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. நமது மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதற்கு, இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்கள் நமது மீனவர்கள் மீது புகார் கூறுவதுதான் காரணமாகும். எனவே இந்தியஇலங்கை மீனவர்களிடையே சுமூகமான உடன்பாடு ஏற்பட தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள கூடாது என்ற கருத்து வலுத்து வருகிறது. தமிழக முதல்–அமைச்சரும், இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகனும் பிரதமரை சந்தித்து காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் காலந்து கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக முன்னாள் முதல்– அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கலைஞரும் பிரதமருக்கு கடிதம் எழுதி அதே கருத்தை வலியுறுத்தி உள்ளார்.

நானும் 2 முறை பிரதமரை சந்தித்து இலங்கை அரசு தொடர்ந்து நமது மீனவர்களை துன்புறுத்தி வருகிறது. நமது மீனவர்களின் படகுகளை சேதப்படுத்துகிறது. மீனவர்களை சிறைபிடிக்கிறது. படகுகளை கையகப்படுத்துகிறது. குறிப்பாக தலைவர் ராஜீவ் காந்தி– ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் இலங்கையில் வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழக மக்களுக்கு சிங்களர்களைப் போன்று அனைத்து அதிகாரங்களும் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தும் அதனை இன்று வரை செய்யவில்லை.

நல்லெண்ணக் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. எனவே இதுபோன்ற தருணத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இலங்கைக்கு செல்வது தொடர்பான சாதக, பாதகங்களை யோசித்து முடிவு செய்யும்படி கோரிக்கை விடுத்துள் ளேன். பிரதமரும் அதனை ஏற்றுக் கொண்டு, நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன். புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஆறரை கோடி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு பிரதமர் மதிப்பளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

ஒரு நாட்டின் தூதர், அடுத்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு உரிமை கிடையாது. இந்தியா சுதந்திரமான நாடு. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்வதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் உரிமை மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் உள் ளது. இதுதொடர்பான இலங்கை நாட்டின் தூதரின் கருத்துக்கள் கண்டனத்திற்குரியது. இன்னொரு நாட்டில் அமர்ந்து கொண்டு அந்த நாட்டைப்பற்றி அவர் கூறிய கருத்துக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. டெல்லிக்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதியின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவிடம் இது தொடர்பாக இந்தியா தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கும். மேலும், இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடும் உரிமை இலங்கை நாட்டின் தூதருக்கு இல்லை என்று திட்டவட்டமாக கூறப்படும்.

இலங்கை கடற்பகுதியில் அந்நாட்டு கடற்படை கப்பல்கள் அதிகளவில் ரோந்து வருகின்றன. அதுபோன்று நமது இந்திய கடல் எல்லைப்பகுதியில் நமது தென்மண்டல கப்பற்படையின் கப்பல்களும், ரோந்து படகுகளும் ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. நாகப்பட்டிணத்திலும் கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இருநாட்டு மீனவர்கள் கலந்து பேசும்போது கச்சத்தீவு பிரச்சினை குறித்து பேசப்படும்.

TAGS: