கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க சல்மான் குர்ஷித் முடிவு: தமிழகத் தலைவர்கள் கண்டனம்

leadersஇலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கப் போவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளது குறித்து  திமுக தலைவர் கருணாநிதி, பா.ம.க. தலைவர் ராமதாஸ், தேமுதிக விஜயகாந்த் மற்றும் தங்கபாலு  உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையே கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

குர்ஷித் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தலைவர்கள் இந்தியாவின் சார்பில் பிரதமரோ, மத்திய அமைச்சரோ அல்லது இந்திய அரசின் பிரதிநிதிகளோ எவரும் பங்கேற்கக்கூடாது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக தலைவர்களின் கருத்து விவரம்:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி:

இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக அறிவிக்க வேண்டும். கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகச் சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு இலங்கைத் தூதர் காரியவசம் டில்லியில் இருந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணித்தால், இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

காரியவசத்தின் கருத்துக்கு ஆதரவு தருவது போல தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனும் பேசியுள்ளார். சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியில்லை என்று சுதர்சன நாச்சியப்பன் கூறியிருப்பது, தமிழர் பிரச்சினையில் அவர் கொண்டுள்ள தவறான அணுகுமுறையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளார். இது மிகுந்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

எனவே, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு இனியும் தாமதம் செய்யாமல், கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிப்பதே சரியாக இருக்கும். பிரதமர் உடனடியாக அதற்கான அறிவிப்பைச் செய்ய வேண்டும் என்றார் கருணாநிதி.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் இலங்கையில் இனப் படுகொலையே நடைபெறவில்லை என்று கூறிவரும் ராஜபக்ச அரசை இந்தியா அங்கீகரிப்பது போல அமைந்துவிடும். எனவே இந்தக் கூட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்துகிறது.

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் விக்னேஸ்வரன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவரது கட்டுப்பாட்டில் பொலிஸ் இருக்காது என்று ஒரு நாட்டு அதிபர் கூறுகிறார் என்றால் இது என்ன கண்துடைப்பு நாடகமா? மக்கள்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ராஜபக்சவை எதிர்த்தால்தான் தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்பதை விக்னேஸ்வரனிடம் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

இப்போது திமுகவும், அதிமுகவும் குரல் கொடுப்பதை பிரபாகரன் உயிருடன் இருக்கும் போது கொடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

2009ல், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக அனைத்துக் கட்சிகளும் அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறினேன். யார் வேண்டுமானாலும் தலைமை வகித்துக்கொள்ளுங்கள் என்றேன். ஆனால், எனது பேச்சை யாரும் கேட்கவில்லை. அதை விட்டுவிட்டு இப்போது காலம் கடந்து டெசோ மாநாடு நடத்துகின்றனர் என்றார் விஜய்காந்த்.

பா.ம.க. தலைவர் ராமதாஸ்:

கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா நிச்சயமாகப் பங்கேற்கும் என்று கூறியுள்ள சல்மான் குர்ஷித்தைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

இந்தியா பங்கேற்கக் கூடாது என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் வலியுறுத்தி வரும் நிலையில் இந்தியா பங்கேற்கும் என்று சல்மான் குர்ஷித் கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.

கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாமலும், இலங்கையுடன் உறவு வைத்துக் கொள்ளாமலும் தமிழக மீனவர்களின் பிரச்னைகளை எவ்வாறு தீர்ப்பது என்று சல்மான் குர்ஷித் கூறியிருப்பது குரூரமான நகைச்சுவையாகும்.

எனவே ஈழத் தமிழர் பிரச்சினையையும், தமிழக மீனவர் பிரச்னையையும் தொடர்ந்து அவமதிப்பு செய்துவரும் குர்ஷித்தை பிரதமர் உடனடியாகப் பதவி நீக்க செய்ய வேண்டும்.

கொமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு:

கடந்த வாரம் புதுடில்லி சென்று தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதமரிடம் எடுத்துக் கூறினோம். எனவே அதைப் புரிந்து கொண்டு, இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிக்க வேண்டும்.

இந்தியா பங்கேற்கும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் பிரதமர் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார் தங்கபாலு.

TAGS: