பாட்னா தொடர் குண்டு வெடிப்பு: ஒரு மணி நேரத்துக்கு முன்பே குண்டு வைத்தனர்

patnaஇந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் எங்கு நாசவேலை செய்தாலும், அந்த இடத்தை ஒரு தடவைக்கு 2 தடவை ஆய்வு செய்வார்கள். குண்டு வைக்க வேண்டிய இடங்களுக்கு சென்று ஒத்திகையும் பார்ப்பார்கள். பாட்னா காந்தி மைதானத்துக்குள்ளும் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் சென்று ஒத்திகை பார்த்துள்ளனர். மறுநாள் அதிகாலை குண்டுகளை வைக்க முடிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு பாட்னாவில் மழை பெய்தது. எனவே காலையில் குண்டு வைத்த பிறகு மழை பெய்தால், குண்டுகள் தண்ணீரில் நனைந்து வெடிக்காமல் போய்விடும். தங்கள் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டு விடக்கூடும் என்று சந்தேகப்பட்டனர். இதையடுத்து தீவிரவாதிகளின் சதி திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. அதன்படி குண்டுகளை, அவை வெடிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் கொண்டு போய் வைத்தனர். ரெயில் நிலையத்தில் குண்டு வைத்து சிக்கிய அன்சாரி மூலம் இது தெரிய வந்துள்ளது.

குண்டு வெடிப்பு தகவலை அலட்சியப்படுத்திய போலீசார்

மோடி பேச இருந்த காந்தி மைதானத்தில் சுமார் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் சற்று உஷாராக இருந்து எல்லோரையும் கண்காணித்து இருந்தால் குண்டு வெடிப்பை முறியடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காந்தி மைதானத்துக்குள் வந்தவர்களை சோதனை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதுதான் தீவிரவாதிகளுக்கு மிகவும் சாதகமாக அமைந்துவிட்டது.

முன்னதாக பாட்னா ரெயில் நிலையத்தில் குண்டு வெடித்ததும், பீகார் மாநில பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும் முன்னாள் துணை முதல்– மந்திரியான சுசீல்குமார் மோடி போலீஸ் உயர் அதிகாரியை போனில் தொடர்பு கொண்டு தகவல் கூறி இருக்கிறார். அதற்கு அந்த போலீஸ் அதிகாரி, ”குண்டு வெடிக்கவில்லை. ஏதோ வாகனத்தின் டயர் வெடித்த மாதிரி இருந்தது” என்று அலட்சியமாக கூறியுள்ளார். சுசில்குமார் மோடி மிகவும் வற்புறுத்திய பிறகே அந்த அதிகாரி சம்பவ இடத்துக்கு சென்றாராம்.

மோடி கூட்டத்துக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை கூறி இருந்தபோதும் போலீசார் காந்தி மைதானத்தில் அதற்கு ஏற்ப எந்த ஏற்பாடுகளையும் செய்திருக்கவில்லை. குண்டுகள் வெடித்த பிறகே அந்த இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து சேர சுமார் ஒரு மணி நேரம் ஆனது.

மேலும் காந்தி மைதானம் வெளியே போக்குவரத்தை சீராக வைத்துக் கொள்ள போலீசார் எந்த ஏற்பாடும் செய்திருக்கவில்லை. அதுபோல ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த மருத்துவ வசதியும் செய்யப்பட்டிருக்கவில்லை. இதனால் காயம் அடைந்த சுமார் 100 பேரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் மிகவும் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து காயம் அடைந்த பலர் மோட்டார் சைக்கிள்கள் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

போலீசார் சில அடிப்படை ஏற்பாடுகளை கூட செய்து தயார் நிலையில் இல்லை. நிதிஷ்குமாருக்கு பிடிக்காதவர் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏனோதானோ என்று கடமைக்கு செய்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

4 தீவிரவாதிகளில் ஒருவன் உயிருக்குப் போராட்டம்

பாட்னாவில் மோடி பிரசார கூட்டத்தை சீர் குலைக்க 10 முதல் 12 குண்டுகள் எடுத்து வந்ததாக தெரிகிறது. 12 தீவிரவாதிகள் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் சிக்கிய நிலையில் மற்ற தீவிரவாதிகள் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். பிடிபட்ட 4 தீவிரவாதிகளில் ஒருவன் குண்டு வெடிப்பில் சிக்கிவிட்டான். அவன் படுகாயம் அடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளான். அவனது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ராஞ்சியில் பிடிபட்ட3 பேரும் விடுவிப்பு

பாட்னாவில் தொடர் குண்டு வெடிப்பு நடந்ததும் பல்வேறு நகரங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ராஞ்சியில் நடந்த சோதனையின்போது 3 மர்ம மனிதர்களை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து குண்டு தயாரிப்புக்கான கருப்பு பவுடர், பிரஷர் குக்கர், டைமர் போன்றவை கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் விடிய, விடிய தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் 3 பேரையும் இன்று காலை போலீசார் விடுவித்துவிட்டதாக தகவல் வெளியானது.

TAGS: