சீனாக்காரனை மட்டுமல்ல, சிலோன்காரனையும் எதுவும் செய்ய முடியாது! தடுமாறும் கரையோர காவல்படை

coast-guard11இலங்கை கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களைக் காப்பாற்ற இராமேஸ்வரம் கடற்பகுதியில் இன்டியன்நேவி கப்பல்கள், கோஸ்ட்கார்டு கப்பல்கள், வான்வழியே பாதுகாக்க சிறிய ரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள், இது போதாதென்று தமிழ்நாடு பொலிஸின் கடலோரக் காவல் படை, அவர்களின் அதிவேகப் படகுகள் என்று ஏராளமானவை உள்ளன.

இப்படையினருக்காக இராமேஸ்வரத்தில் ஒரு நேவி முகாமும், மண்டபத்தில் கோஸ்ட்கார்டு முகாமும், குடியிருப்புகளும், உச்சிப்புளியில் ஐ.என்.எஸ்.பருந்து என்ற கப்பல்படை விமானத் தளமும், குடியிருப்புகளும், அவர்கள் பிள்ளைகளுக்காக மத்திய அரசுப் பள்ளியும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன.

நம் கடல் எல்லையை அந்நியர்கள் ஊடுருவாமல் பாதுகாப்பதும், ஆபத்தில் மாட்டிக்கொள்ளும் மீனவர்களை காப்பற்றுவதும்தான் இவர்களது பணி.

ஆனால், இதுவரை அத்துமீறிய சிங்களக் கடற்படையை இவர்கள் தாக்கியதாகவோ, நம் மீனவர்களை காப்பாற்றியதாகவோ கேள்விப்பட்டதில்லை.

ரோந்து என்ற பெயரில் தினமும் கப்பலில் மிதப்பதையும், வானில் பறப்பதையும் தவிர வேறு எதையும் செய்ததில்லை.

இராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளியில்தான் இந்தியக் கடற்படையின் விமானதளம் ‘ஐ.என்.எஸ். பருந்து’ உள்ளது. இந்தப் படையினர், வங்கக் கடலின் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் ரோந்து சுற்றுகின்றனர்.

இதற்காக, இந்த விமானத் தளத்தில் ஐ.என்.480, 481 ஆகிய இரு ஹெலிகாப்டர்கள் உள்ளன. கடந்த மாதம் 18-ம் திகதி காலை, ரோந்து சென்ற ‘480’ என்ற ஹெலிகாப்டர் வானில், வழுதூர் எரிவாயு மின்உற்பத்தி நிலையத்தின் மேலே பறந்து கொண்டிருந்தபோது கோளாறு ஏற்பட்டது.

பைலட்டின் சாமர்த்தியத்தால் ஹெலிகாப்டர் மின் உற்பத்தி நிலையத்துக்கு ஆபத்து ஏற்படுத்தாத வகையில் அருகில் இருந்த வயல் வெளியில் தரை இறக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி இராமேஸ்வரம் வந்திருந்த நாடாளுமன்றத் துறை இணை அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம்,

அந்நிய நாடுகளின் ஊடுருவல்களை எதிர்கொள்ளும் சக்தி நமது இராணுவத்தினருக்கு உள்ளது’ என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு அதிர்ச்சி தகவல் வந்தது.

தனுஷ்கோடி கடல் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த ‘481’ ஹெலிகாப்டர் இயந்திர பழுதால் அரிச்சல்முனை மணல் பகுதியில் தரை இறங்கியது’ என்பதுதான் அது.

அப்போதும், பைலட்டின் திறமையால் ஹெலிகாப்டர் கடலில் விழாமல் அருகில் இருந்த மணல் பரப்பில் இறக்கப்பட்டதன் மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பழுதடைந்த இரு ஹெலிகாப்டர்களையும் அந்த இடத்திலேயே சரி செய்ய முடியவில்லை. வழுதூர் அருகே தரை இறக்கப்பட்ட ஹெலிகாப்டரின் இறக்கைகள் கழற்றப்பட்டு லாரி மூலம் கடற்படை விமானத் தளத்துக்கு கொண்டு வரப்பட்டது.

தனுஷ்கோடியில் தரை இறங்கிய ஹெலிகாப்டரின் நிலை இன்னும் மோசம். அந்த ஹெலிகாப்டரிலும் பழுது நீக்க முடியாத நிலையில் அதன் இறக்கைகள் கழற்றப்பட்டன.

இராணுவ ஹெலிகாப்டரை ஜீப் மூலம் கட்டி இழுத்துப்போவதை மக்கள் பார்த்தால் கடற்படை மீதான மரியாதையே போய்விடும் என்பதால், நள்ளிரவு நேரத்தில் கடற்படைக்கு சொந்தமான ஜீப்பின் மூலம் ஹெலிகாப்டர் பருந்து விமானதளம் வரை சாலையில் கட்டி இழுத்து வரப்பட்டது.

எல்லையைப் பாதுகாக்கும் கடற்படையின் நிலை இந்த லட்சணத்தில் இருந்தால் சீனாக் காரனை மட்டுமல்ல, சிலோன்காரனையும் எதுவும் செய்ய முடியாது.

உச்சிப்புளி ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான நிலையத்தின் ஒழுங்கற்ற இந்தநிலை பற்றி, மத்திய அரசு எந்தவொரு விசாரணையும் நடத்தாமல் அசால்டாக இருப்பது ஏனென்று தெரியவில்லை.

ஆனால், வருடா வருடம் தேசப் பாதுகாப்புக்காக நம் அரசு செலவு செய்யும் தொகை மட்டும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதெல்லாம் எங்கே போகிறதென்று தெரியவில்லை.

இராணுவ ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் என சமீபத்தில் புகார் எழுந்தது. இராணுவ ஹெலிகாப்டர்கள் அடிக்கடி பழுதாகி ஆங்காங்கே தரை இறங்குவதைப் பார்த்தால் இவங்க முதல்ல இருந்தே இப்படித்தானோ என நினைக்கத் தோன்றுகிறது.

சமீபத்தில், தூத்துக்குடியில் அமெரிக்க ஆயுதக் கப்பல் ஒன்று அத்துமீறி நம் நாட்டுக்குள் புகுந்து மாட்டிக்கொண்டது.

நம் பாதுகாப்புப் படைகளின் லட்சணம் இராமேஸ்வரம் கடற்படையைப் போல இருந்தால் அமெரிக்கக் கப்பல் மட்டுமல்ல, ஆபிரிக்க நாட்டுக் கப்பல் வந்தால்கூட ஒன்றும் செய்ய முடியாது.

இது சம்பந்தமாக பாதுகாப்புத் துறை வட்டாரம் எந்த விளக்கத்தையும் அளிக்காததும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

TAGS: