தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கு பாகிஸ்தான் ராணுவமே காரணம்: ஏ.கே.அந்தோனி

akantonyஇந்திய எல்லைப் பகுதியில் தொடர்ந்து நிகழும் ஊடுருவல்கள், மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தாக்குதல்களை இந்தியா கண்டித்துள்ளது. தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கு பாகிஸ்தான் ராணுவமே காரணம் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி கூறியுள்ளார்.

புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியதாவது:

எல்லைக்கு அப்பாலிருந்து நிகழும் ஊருவல்களைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும், பாகிஸ்தான் பகுதியிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவும் முயற்சிகள் தொடர்கின்றன. பாகிஸ்தான் அரசுக்குத் தெரியாமலோ, பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியில்லாமலோ ஊடுருவல் நிகழ வாய்ப்பில்லை.

எல்லைக்கு அப்பால் பாகிஸ்தான் பகுதியில் பாக். ரேஞ்சர்களால் அந்நாட்டு எல்லை பாதுகாக்கப்படுகிறது. அவர்களது உதவியில்லாமல் அந்நாட்டுத் தீவிரவாதிகள் எவ்வாறு இந்தியப் பகுதிக்குள் நுழைய முடியும்? இந்நிலை மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.

ஊருவல் மட்டுமல்லாது, போர்நிறுத்த உடன்படிக்கை மீறல்களும் தொடர்கின்றன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) பகுதியில் வழக்கத்திற்கு மாறான ராணுவ அத்துமீறல்கள் அடிக்கடி நிகழ்கின்றன. திடீரென்று சர்வதேச எல்லைக் கோடு (ஐபி) பகுதியிலும் பாக். ராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களில் இந்திய வீரர்கள் பலரும், குடிமக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் அரசுக்கு இந்தியாவுடன் நட்புறவு பேண வேண்டும் என்பதில் உண்மையிலேயே ஆர்வம் இருக்குமானால், ஊடுருவல் சம்பவங்கள் நிகழாது. பாகிஸ்தானுடன் நல்லுறவு காணவே நாம் விரும்புகிறோம். இதையே ஒவ்வொரு முறையும் கூறி வருகிறோம். இதேபோல பாகிஸ்தான் தரப்பிலும் நேச எண்ணம் இருந்தால் ஊருவல்கள் அதிகரிக்க வாய்ப்பிருக்குமா?

எல்லைப் பகுதியில் நிகழும் அத்துமீறல்களை எதிர்கொள்ள இந்திய ராணுவ வீரர்கள் 24 மணிநேரமும் தயாராகவே உள்ளனர். அவர்கள் எத்தகைய சவால்களையும் சமாளிக்கும் திறனுடன் உள்ளனர். எல்லையில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பதில் வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்றார் ஏ.கே.அந்தோனி.

எல்லைப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் பாக். ராணுவம் மற்றும் ஊருவல் முயற்சிகளில் கடந்த சில வாரங்களில் பலர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்தே, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி மேற்கண்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க்கில் சந்தித்தபோது எல்லைப் பிரச்னை குறித்துப் பேசினர். அப்போது, இருதரப்பிலும் ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல்கள் மட்டத்தில் சந்தித்துப் பேசுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இருப்பினும் அந்தச் சந்திப்பு எப்போது நடைபெறும் என்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

TAGS: